பக்கம் எண் :

188தொல்காப்பியம் - உரைவளம்
 

உதாரணம்:
  

“அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉந்
தண்டுறை ஊரன் பெண்டினை யாயின்
பலகுவாகுகநின் நெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட்டியானை நெடுந்தேர் அஞ்சிக்
கொன்முனை இரவூர் போலச்
சிலவாகுகநீ துஞ்சுநாளே”
1

  

எனவரும்.
  

எண்ணிய  பண்ணை  யென்றிவற்றோடு  என்பது - எண்ணப் பட்ட விளையாட்டு என்று சொல்லப்பட்ட
இவற்றோடென்றவாறு.
  

விளையாட்டாவது ஆறுங் குளனுங் காவும் ஆடுதல்.
  

உதாரணம்:
  

“கூந்தல் ஆம்பல் முழுநெறி யடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃதயர்கம் சேறுந்தானஃ
தஞ்சுவதுடையளாயின் வெம்போர்
நும்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடு நுகர்கதன், கொழுநன்மார்பே”
2

(குறுந் - 80)
  

பிறவும்  என்பதனால்   தலைமகட்குரித்தாகச் சொல்லப்பட்டவற்றுள் ஒப்பனகொள்ளப்படும். அவற்றுட் சில
வருமாறு.


1. பொருள்:  பிரப்பம் பழத்தை பொய்கைக் கெண்டை மீன் கதுவுகின்ற தண்துறையூரனது பெண்ணானால்
ஏடீ!  நின்  நெஞ்சத்திற்கண்  துன்பம்  பலவாகுக. மேகம் போலும் வண்கையும் யானையையும் உடைய
அஞ்சி  என்பான்  கொல்லும்  பாசறையுள்ள  இரவூர்  தூங்கும் நாள் சிலவுளதாதல் போல நீ தூங்கும்
நாள்கள் சிலவேயாகுக.
  

2. பொருள்: கூந்தல் போலும் நெறிப்பையுடைய ஆம் பலந்தழையை உடுத்தி மிக்க வெள்ளம் வந்த
நீர்த்துறையில்   ஆடுதற்கு   விரும்பி   யாம்  தலைவனுடன்  செல்வேம்.  தலைவியானவள்  அதற்கு
அஞ்சுவதுடையளானால்   தான்தன்   கணவன்  மார்பை  எம்முடன்  கலவாதபடி  எழினியின்  போர்
முனையில் அகப்படுக்கப்பட்ட பசுக் கூட்டங்களைக் காப்பதுபோலக் காத்துக் கொள்வாயாக,