பக்கம் எண் :

கற்பியல் சூ.11205
 

“பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகையேந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்
றருநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇமெலிந் தொழியப் பந்தரோடி
ஏவல் மறுக்குஞ்சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறனுற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறுள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமதுகையளே”
1

(நற்றிணை - 110)
 

எனவும்,
 

“பாணர் முல்லை பாடச் சுடர்இழை
வாணுதல் அரிவை முல்லை மலைய
இனிதிருந்தனனே நெடுந்தகை
துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே”
2

(ஐங்குறு-408)
 

எனவும் வரும். இவையெல்லாம் வாயில்கள் தம்முட் கூறின. தலைவற்குக் கூறின வந்தவழிக் காண்க.


1 பொருள்:   செவிலி   நற்றாய்க்குக்   கூறியது. தேன்கலந்த சுவையான இனிய பாலைப் பொற்கலத்துக் கொண்டு ஒரு கையில் ஏந்தி இதனையுண்க என்று சொல்லிப் புடைப்பு அமையச் சுற்றிய ஒரு கோலால்
அடிப்பது  போல்  ஓச்ச,  உண்  என்னும் ஏவலை  மறுத்து முத்துப்பரல் உள்ள காற்சிலம்பு ஒலிப்பச்
செவிலியர்  பிடிக்கவும்  தப்பி  அவர் மெலியுமாறு  பந்தர்ப்  பக்கம்  ஓடி  உண்ண  மறுக்கும் சிறிய
விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவள், இன்று தன் கணவன் குடி வறுமை யெய்தத் தன் தந்தை தந்த
உணவையும்  மறுத்து  ஒழுகும் நீர்வற்ற ஆங்காங்கே  அறல் காணப்படுதல் போல நாள் விட்டு நாள்
விட்டு உண்ணும் ஆற்றலைப் பெற்றாள். இத்தகைய அறிவும் ஒழுக்கமும் எங்கு உணர்ந்தாள்.

2 பொருள்: பாணர்  முல்லைப்  பண்பாடவும்  தலைவி முல்லைப் பூச்சூடவும்தலைவன் வெறுப்பு நீங்கிய
கொள்கையொடு தன் புதல்வனொடு சிறந்து வீற்றிருந்தான்.