பக்கம் எண் :

மாலை நிலையே மூதா னந்தம்
5ஆனந் தம்மே யானந்தப் பையுள்
கையறு நிலையுளப் படப்பதி னொன்றும்
மையறு சிறப்பிற் பொதுவியற் பால .

என்-னின், இதுவும் பொதுவியற்பாலவாமாறுஉணர்த்துதல் நுதலிற்று .

(இ - ள்.) முதுபாலை முதலாகக் கையறுநிலை யீறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் பொதுவியற்பாலவாம் எ-று .

அவற்றுள் :

254. முதுபாலை

1காம்புயர் கடத்திடைக்கணவனை யிழந்த
பூங்கொடி மடந்தை புலம்புரைத் தன்று.

(இ - ள்.) மூங்கில் ஓங்கின கானகத்துத் தன்கொழுநனையிழந்த பொலிந்த கொடி போன்ற மடந்தையதுதனிமையைச் சொல்லியது எ-று .

வ - று. நீர்மலி கண்ணொடு நின்றேனிலையிரங்காய்
தார்மலி மார்பன் றகையகலம் - சூர்மகளே
வெள்ளில் விளைவுதிரும் வேயோங்கும் வெஞ்சுரத்துக்
கொள்ளனீ கோடல் கொடிது.

(இ - ள்.) நீர்மிகுங் கண்ணோடே நின்றேனுடையநிலைக்கு வருந்தாயாய் மாலைமிக்க அகலத்தையுடையவன் அழகிய மார்பை , சூர்மகளே , விளாவினது பழமுதிரும்மூங்கில் உயர்ந்த காட்டிடத்துக் கொள்ளுதல் ஒழிவாயாகநீ; கொள்ளுமது மிகவும் கொடுமையுடையது எ-று .

(1)

255. சுரநடை

மூதரி னிவந்த முதுகழை யாரிடைக்
காதலி யிழந்த கணவனிலை யுரைத்தன்று.

(இ - ள்.) முதிர்ந்த பிணக்கமோங்கிய முற்றின மூங்கிலையுடைத்தாய் நிறைந்த இடத்திலே தலைவியை இழந்த தலைவன் முறையைச் சொல்லியது எ-று.

வ - று. உரவெரி வேய்ந்த வுருப்பவிர் கானுள்
வரவெதிரின் வைவேல்வாய் வீழ்வாய் - கரவினால்
பேதையைப் பெண்ணியலைப் பெய்வளையை யென்மார்பிற்
கோதையைக் கொண்டொளித்த கூற்று.

(இ - ள்.) உலாவும் நெருப்புமூடின வெப்புமிகுங் காட்டிடத்து என் முன்னே நீ வருதலை ஏற்பாயாயின், என்னுடைய கூரியவேலின் வாயிலே வீழ்வாய்; களவாலே, மடவாளைப் பெண்மைத்தன்மையுடையாளை இட்டவளையினையுடையாளை என்னுடைய மார்பின்மாலையை மறைத்துக் கொண்ட கூற்றமே.

(2)


1. புறநா. 253, உரை, மேற்.