பக்கம் எண் :

256. தபுதாரநிலை

புனையிழை யிழந்தபிற் புலம்பொடு வைகி
மனையகத் துறையு மைந்தனிலை யுரைத்தன்று.

(இ - ள்.) அணிந்த ஆபரணத்தினையுடையாளை இழந்தபின் தனிமையுடனே தங்கி இல்லிடத்து அவதரிக்கும் ஆண்மகன் முறைமையைச் சொல்லியது எ-று.

வ - று. பைந்தொடி மேலுலக மெய்தப் படருழந்த
மைந்தன் குருசின் மழைவள்ளல்-எந்தை
2தவுதாரத் தாழ்ந்த தனிநிலைமை கேளாச்
செவிடா யொழிகென் செவி.

(இ - ள்.) பச்சென்ற வளையினையுடையாள் சுவர்க்கத்தைப்பொருந்தவருத்தமுற்ற ஆண்மகன், தலைவன், மழைபோலக் கொடுக்கும் உபகாரி, என்னுடைய சாமி மனையாளை இழந்தழுந்தின தனியான நிலைமையைக் கேளாத செவிடாய் போக, என் செவி எ-று.

(3)

257.தாபதநிலை

1குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று.

(இ - ள்.) குருந்தப்பூ மலரும் மாலையினையுடைய கணவன் இறந்தானாகக் கரியபெரிய கண்ணினையுடையாள் வைதவியமெய்தியவாற்றைச் சொல்லியது எ-று.

வ - று. கலந்தவனைக் கூற்றங் கரப்பக் கழியா
தலந்தினையு மவ்வளைத் தோளி-உலந்தவன்
தாரொடு பொங்கி நிலனசைஇத் தான்மிசையும்
காரடகின் மேல்வைத்தாள் கை.

(இ - ள்.) தன்னுடனே கூடின கொழுநனைக் கூற்றுவனொளிப்பத்தான் இறந்து படாது நொந்துவருந்தும் அழகிய வளைத்தோளினையுடையாள், தன்னைவிட்டு இறந்தவன் மாலையோடு கோபித்து வெறுநிலத்திலே வதிந்து தான் அருந்தும் கரிய அடகின்மேலேகையை வைத்தாள் எ-று.

(4)

258. தலைப்பெயனிலை

இன்கதிர் முறுவற்பாலக னென்னும்
தன்கட னிறுத்ததாய் தபுநிலை யுரைத்தன்று.

(இ - ள்.) இனிய ஒளிநகையினையுடைய பிள்ளையென்னும்தான் கொடுக்கக் கடவதனைக் கொடுத்த மாதர் இறந்தமுறைமையைச் சொல்லியது எ-று.


1. புறநா. 248, உரை, மேற். (பி-ம்.)2. 'தபுதாரத்'.