பக்கம் எண் :

பின்பு தலைவனுடைய கீர்த்தியுடன் ஆரவாரம் தலைமணந்ததால், மிகா நின்ற அகழ்ந்தகடலை வேலியாகவுடைய பூமியிடத்து எ-று

பூமியிடத்துப் புகழொடு பூசல் மயங்கிற்றாலென்க.

(7)

261. மாலைநிலை

கதிர்வேற் கணவனொடு கனையெரி முழுக
மதியேர் நுதலி மாலைநின் றன்று.

(இ - ள்.) ஒளியால் மிக்க வேலினையுடைய கொழுநனொடு செறிந்த நெருப்பிலே புகுவான் வேண்டிப் பிறையையொத்த நெற்றியினையுடையாள் மாலைக்காலத்திலே நின்றது எ-று.

வ - று. சோலை மயிலன்னா டன்கணவன்சொல்லியசொல்
மாலை நினையா மனங்கடைஇக் - காலைப்
புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள்
அகையழ லீமத் தகத்து.

(இ - ள்.) பொழின்மயிலை அனையாள், தன் கணவன் பகர்ந்த வார்த்தையை மாலைக்காலத்திலேநினைத்து மனத்தை முடுக்கிக் காலைப் பொழுதிலேமூளும் தழல் போன்ற வேலினையுடையான்தன் துணையாகிநின்றாள், கொழுந்துவிட்டெரியும் நெருப்புப் பொருந்தியசுடுகாட்டகத்து எ-று.

ஈமத்தகத்துப் புணர்ப்பாகிநின்றாளென்க.

(8)

262. மூதானந்தம்

கயலேர் கண்ணி கணவனொடு முடிய
வியனெறிச் செல்வோர் வியந்துரைத் தன்று.

(இ - ள்.) கயலையொத்த விழியினையுடையாள்தன் கொழுநனோடு இறந்துபட அகன்ற வழியிடத்துப்போவார் கண்டு அதிசயித்துச் சொல்லியது. எ-று.

வ - று.1ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க்
கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில்
விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே யுலந்த துயிர்.

(இ - ள்.) ஒரு பிராணனாக அறிக, ஒக்க மணந்தவர்க்கு; இரண்டு பிராணனென்று சொல்லுவர் நடு ஆராயாதார்; பூசலிடத்து நஞ்சைத் தாங்கும் வேலினையுடையாற்கும்விளர்த்த வளையினை யுடையாட்கும் ஒக்க விட்டதுபிராணன், ஆதலால் எ-று.

(9)

263. இதுவுமது

கொடியான் கூர்ங்கணை குளிப்பத்தன்றொழில்
முடியா னவிதலு மூதா னந்தம்


1 தொல். புறத். சூ.19, இளம்; சூ.24, ந.மேற்; திருச்சிற். 71; சீவக. 2344; சிலப். 25 : 78-86.