பக்கம் எண் :

(இ - ள்.) இனியவல்ல, நிமித்தமும்; பொருந்துவனவல்ல, நற்சொல்லும்; அன்னே, சுழன்றுவாராநின்றது, என்னுடைய அரிய பிராணனும்; என்னாகவற்றே! திரண்டுநிறைந்த சினவேந்தருடைய வெல்லும் துடிகறங்கத் தலைவனும் பூசலிடத்திற்குத் தலைப்பட்டான் எ-று.

(12)

266. ஆனந்தப்பையுள்

1விழுமங் கூர வேய்த்தோ ளரிவை
கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று.

(இ - ள்.) இடும்பை மிக மூங்கில்போன்ற தோளினையுடையாள் கணவனிறப்ப மெலிந்து வருந்தியது எ-று.

வ - று. புகழொழிய வையகத்துப் பூங்கழற்காளை
திகழொளிய மாவிசும்பு சேர - இகழ்வார்முன்
கண்டே கழிகாத லில்லையாற் கைசோந்தும்
உண்டே யளித்தெ னுயிர்.

(இ - ள்.) கீர்த்தி பாரிலே நிற்பப் பொலிந்தவீரக்கழலினையுடைய தலைவன் இலங்கும் ஒளியினையுடைய சுவர்க்கத்தைப் பொருந்த எள்ளுவாரை முன்னே கண்டுவைத்து இறந்துபடும் அன்பின்றால், செயலற்றும் உண்டாயிருந்தது, அளியினையுடைத்து, என்னுயிர் எ-று.

(13)

267. கையறுநிலை

செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
கையற வுரைத்துக் கைசோர்ந் தன்று.

(இ - ள்.) தொழில் அழகுபெற்ற வீரக்கழலினையுடைய வேந்தன் துஞ்சினனாக அணைந்தோர் இறந்தமையைச் சொல்லி ஒழுக்கம் தளர்ந்தது எ-று.

வ - று. தாயன்னான் றார்விலங்கி வீழத்தளர்வொடு
நீயென்னாய் நின்றாயென் னெஞ்சளியை-ஈயென்றார்க்
கில்லென்ற றேற்றா விகல்வெய்யோன் விண்படரப்
புல்லென்ற நாப்புலவர் போன்று.

(இ - ள்.) எல்லாவுயிர்க்கும் தாயன்னவன்மாற்றார் கொடிப்படையைத் தடுத்துப்பட மெலிவுடனேசேதனமாய் நின்றாயோ? அசேதனமாய் நின்றாயோ? உகாதுநீ என்னாகி நின்றாய் ? என்னுடைய மனமே, நீஅளியினையுடையை; எனக்கு இது தருகவென்று வேண்டினோர்க்குஇல்லையென்னும் வார்த்தையையறியாதபோர்விரும்புவோன் விண்ணிலே செல்லப் புற்கென்றசெந்நாப்புலவரை ஒத்து எ-று.

இது சுற்றத்தார்மேற்று.

(14)

268. இதுவுமது

கழிந்தோன் றன்புகழ் காதலித் துரைப்பினும்
மொழிந்தனர் புலவ ரத்துறை யென்ப.


1. புறநா. 228, 246, உரை, மேற். 2. என்ப :அசை.