270. பெருங்காஞ்சி மலையோங்கிய மாநிலத்து நிலையாமை நெறியுரைத்தன்று. (இ - ள்.) வரையுயர்ந்த பெரிய குவலயத்து நிலைநில்லா நெறியைச் சொல்லியது எ-று. வ - று. ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து மாயா நிதிய மனைச்செறீஇ-ஈயா 1திறுகப் பொதியன்மி னின்றொடு நாளைக் குறுக வருமரோ கூற்று. (இ - ள்.) ஆராயாதே உணர்ச்சி மறந்து அலம்வந்து பூமியிடத்துக் கெடாத பெரும்பொருளை இல்லிலே சேர்த்திப் பிறர்க்கு வழங்காதே சிக்கெனக் கட்டிவையாதொழிமின்; இன்றாதல் நாளையாதல் நும்மை அணுகவரும் கூற்றம். எ-று. அதனால், ஈயாது இறுகப் பொதியன்மினென்க. ஒடுவும் அரோவும் அசைகள். (4) 271. பொருண்மொழிக் காஞ்சி எரிந்தி லங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருண்மொழிந் தன்று. (இ - ள்.) அவிர்ந்து விளங்கும் சடாமகுடத்தினையுடையமுனிவர் விரும்பித் தெளிந்த பொருளைச் சொல்லியது. எ-று. வ - று.2ஆய பெருமை யவிர்சடையோ ராய்ந்துணர்ந்த பாய நெறிமேற் படர்ந்தொடுங்கித் - தீய இருளொடு வைகா திடம்படு ஞாலத் தருளொடு வைகி யகல். (இ - ள்.) உண்டாய பெருமையினையும் விளங்கும் வேணியினையும் உடையோராகிய முனிவர்தெரிந்தறிந்த பரந்த வழிமேலே நினைந்து அடங்கித் தீதான மனமயக்கத்துடனே தங்காது அகன்ற பூமியிடத்தில் அருளுடனேதங்கி நீங்கு, நெஞ்சே. எ-று. (3) 272. புலவரேத்தும் புத்தேணடு 3நுழைபுலம் படர்ந்த நோயறுகாட்சி விழைபுலங் கடந்தோர் வீடுரைத் தன்று. (இ - ள்.) நுண்ணிதான அறிவு சென்ற குற்றமற்ற தரிசனத்தையுடையராய் இந்திரியசயம் பண்ணினார் விரும்பும் மேலுலகத்தைச் சொல்லியது எ-று. வ - று. பொய்யில் புலவர் புரிந்துறையுமேலுலகம் ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் - வெய்ய பகலின் றிரவின்று பற்றின்று துற்றின் றிகலின் றிளிவரவு மின்று.
1. நாலடி. 4, 36. 2. ஏலாதி, 67. 3. குறள், 407. |