291. நயப்புற்றிரங்கல் கொய்தழை யல்குல் கூட்டம் வேண்டி எய்துத லருமையி னிறப்பப் புகழ்ந்தன்று. (இ - ள்.) கொய்தழையான் அணிந்த அல்குலையுடையாள்தன் புணர்ச்சியை விரும்பிப் பொருந்துதற்கு அருமையான் மிகவும் புகழ்ந்தது எ-று. வ - று. பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க் கருமழைக்கண் வெண்முறுவற் பேதை-திருமுலை புல்லும் பொறியி லேனுழை நில்லா தோடுமென் னிறையி னெஞ்சே. (இ - ள்.) மிக்க மடப்பத்தாற் சிறந்த பார்வையினையும் சிறிய நுதலினையும் சிவந்த வாயினையும் கரியமழைபோலக் குளிர்ந்த கண்ணினையும் விளர்த்த எயிற்றினையுமுடைய மடவாள்தன் அழகிய முலையைத் தழுவும் விதியிலாதேனிடத்துத் தரியாதே ஓடாநின்றது, என்னுடைய நிறையில்லாத மனம் எ-று. (7). 292. புணரா இரக்கம் உணரா வெவ்வம் பெருக வொளியிழைப் புணரா விரக்கமொடு புலம்புதர வைகின்று. (இ - ள்.) பிறரறியாத துக்கம் மிகச் சுடர்விடும் ஆபரணத்தையுடையாளை மணவாத விதனத்தோடே தனிமையுறத் தங்கியது எ-று. வ - று. இணரார் நறுங்கோதை யெல்வளையாள்கூட்டம் புணராமற் பூச றரவும் - உணராது தண்டா விழுப்படர் நலியவும் உண்டா லென்னுயி ரோம்புதற் கரிதே. (இ - ள்.) தொத்து நிறைந்த நறிய மாலையினையும் இலங்குந்தொடியினையுமுடையாள் தன் புணர்ச்சி கூடாமையாலே பிறரிகழும் ஆரவாரம் உண்டாகவும், அறியாது கெடாதசீர்மையினையுடைய நினைவு வருத்தவும் சிறிது உளதால், என்னுடைய உயிர், இனிப் பாதுகாத்தற்கு அரிது எ-று. (8) 293. வெளிப்பட இரத்தல் அந்தழை யல்கு லணிநலம் புணரா வெந்துயர் பெருக வெளிப்பட விரந்தன்று. (இ - ள்.) அழகிய தழையணிந்த அல்குலினையுடையாள்தன் நல்ல நலத்தைக் கூடாத வெய்ய வருத்தம் மிகத்தோன்ற இரந்தது எ-று. வ - று. உரவொலி முந்நீ ருலாய்நிமிர்ந்தன்ன கரவருங் காமங் கனற்ற - இரவெதிர முள்ளெயி றிலங்கு முகிழ்நகை வெள்வளை நல்காள் விடுமென் னுயிரே. |