| கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும் விடுத்த லறியா விறல்புரி வாகையுள் | 5 | வாணிக வென்றியு 1மல்ல வென்றியும் நீணெறி 2யுழவ னிலனுழு வென்றியும் இகல்புரி யேறொடு கோழியு மெதிர்வன் தகருடன் யானை தணப்பில்வெம் பூழொடு சிவல்கிளி பூவை செழும்பரி தேர்யாழ் | 10 | இவர்தரு சூதிடை யாடல் பாடல் பிடியென் கின்ற பெரும்பெயர் வென்றியொ டுடையன பிறவு முளப்படத் தொகைஇ மெய்யி னார்தமிழ் வெண்பா மாலையுள் ஐய னாரித னமர்ந்துரைத் தனவே. |
என்-னின், பாடாண் பகுதியிலும் வாகையிலுமுள்ள புறத்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பாடாண்பகுதியுட் கொடுப்போரேத்திக் கொடாஅர்ப்பழித்தலும், வாகைத் திணையுள் வாணிகவென்றி மல்வென்றி உழவன் வென்றி ஏறுகொள் வென்றி கோழி வென்றிதகர்வென்றி யானைவென்றி பூழ்வென்றி சிவல்வென்றி கிளிவென்றி பூவைவென்றி குதிரைவென்றி தேர்வென்றி யாழ்வென்றி சூதுவென்றி ஆடல்வென்றி பாடல்வென்றி பிடிவென்றி என இவை பதினெட்டுமாம் எ-று. அவற்றுள் :- 343. கொடுப்போ ரேத்திக் கொடார்ப்பழித்தல் வ - று. சீர்மிகு நல்லிசை பாடிச்செலவயர்தும் கார்முகி லன்னார் கடைநோக்கிப் - போர்மிகு மண்கொண்ட வேன்மற மன்னரே யாயினும் வெண்கொண்ட லன்னாரை விட்டு. (இ - ள்.) சீர்மிக்க நல்ல புகழைப் பாடிச்செல்ல விரும்புவேம், காலமழை யன்னார் வாய்தலைக்கருதி; பூசன்மிக்க பூமியெல்லாம் கைக்கொண்ட வேலினையுடைய மறவேந்தரேயாயினும் பெய்யாமுகிலனை யாரை விட்டு எ-று. விட்டு , கார்முகிலன்னார் கடைநோக்கிச் செலவயர்தும் . (1) 344. வாணிக வென்றி வ - று. காடுங் கடுந்திரை நீர்ச்சுழியுங்கண்ணஞ்சான் சாடுங் கலனும் பலவியக்கி - நீடும் பலிசையாற் பண்டம் பகர்வான் பரியான் கலிகையா னீக்கல் கடன். (இ - ள்.) காட்டையும் கடிய திரையினையுடைய நீர்ச்சுழியையும் கண்ணஞ்சானாய்ச் சகடம் பலவும்மரக்கலம் பலவும் இடந்தோறும் [செலுத்தி நீடும் இலாபம்காரணமாகப் பலபண்டமும் விற்கும் வாணிகன் பொருளிற் பற்றிலனாய்ப் பிறர்மிடியைத் தன் கையாலே நீக்குமது, செய்தி எ-று.] (2)
(பி.ம்.)1. 'மல்லின் வென்றியும்' 2. 'யுழுவர் நிலனுழு' |