பக்கம் எண் :

(வ - று.)அறாஅ நிலைச்சாடி யாடுறு தேறல்
மறாஅன் மழைத்தடங் கண்ணி-பொறாஅன்
கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை
நெடுங்கடைய நேரார் நிரை.

(இ - ள்.) கள்ளறாத நிலைத்தாழியில் அடுதலுற்ற மதுத்தெளிவை மறாதே; குளிர்ந்த பெரிய கண்ணினையுடையாய், தனிசு பொறான் தறு கண்வீரன்; காலிலே வீரக்கழலைக் கட்டினான்; காலையிலே நின் நெடிய வாசலிடத்தனவாம், பகைவர்நிரை எ - று.

நிரை காலை நின்கடையவாதலால் மறாதே வார்ப்பாயாகவென்க.

நெடியகடையிலே வந்துநின்றன நேரார்நிரையென்று இறந்தகாலப் பொருளாக்கிக் கடுங்கண்மறவன் கழல்புனைந்தவனெனப் பெயராக்கிப் பின்பு வார்ப்பேனெனப் பொறானென்றலுமொன்று.

(2)

3. வெட்சியரவம்

கலவார் முனைமேற்
செலவமர்ந் தன்று.

(இ - ள்.) பொருந்தாதார் முனையிடத்துப் போதலை விரும்பியது எ - று.

(வ - று.)1நெடிபடு கானத்து நீள்வேன் மறவர்
அடிபடுத் தாரதர் செல்வான் - துடிபடுத்து
2வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுட் காரி 3கலுழ்ம்.

(இ - ள்.) சிள்வீடு கறங்குங் காட்டிடத்து நீண்ட வேலினையுடைய மறவர் காலிலே செருப்பைத் தொட்டுக் கடத்தற்கரிய வழியிடத்துச் செல்வான்வேண்டித் துடியைக் கொட்டப்பண்ணி வெட்சிப்பூவைச் சூடப்பகைவர் மணியாற்சிறந்த பசுவினையுடைத்தான காட்டிடத்துக் காரியென்னும் புள்ளுத் துந்நிமித்தமாக4அழாநிற்கும் எ - று .

(3)

4. விரிச்சி

வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்
கீண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று.

(இ - ள்.) விரும்பியபொருளின் ஆக்கத்து அழகுணர்தற்குச் செறியும் இருண்ட மாலையிடத்து நற்சொற் கேட்டது எ - று.


1. தொல். புறத். சூ. 3, இளம். மேற். 2. சிலப். 12 : "உட்குடை" .(பி - ம்.) 3. எழும். 4. எழாநிற்கும்.