(இ - ள்.) பசுநின்ற இடமும் பசுவினுடைய அளவும் பசுவினுடைய புறங்காத்துநின்ற விற்படையினளவும் போர்ப்புலத்தில் தங்கிப் பச்சிலையுடனே விரவித்தொடுத்த தேன்பொழியுமாலையினையும் வீரக்கழலினையுமுடைய போரை விரும்பியோய், வேற்றுப்புறத்திலேபோய் ஆராய்ந்து நடுவிருளிடத்து நம் சுற்றத்தார் வந்தார் எ - று . (6) 7. புறத்திறை நோக்கருங் குறும்பி னூழையும் வாயிலும் போக்கற வளைஇப் புறத்திறுத் தன்று. (இ - ள்.) பகைவரது கண்ணாற் பார்த்தற்கரிய குறும்பின் நூழையும் பெருவாயிலும் யாவரும் புறப்படாதபடி வளைந்து ஊர்மருங்கே விட்டது எ - று. வ - று.1உய்ந்தொழிவா ரீங்கில்லை யூழிக்கட் டீயேபோல் முந்தமரு ளேற்றார் முரண்முருங்கத் - தந்தமரின் 3ஒற்றினா னொற்றி யுரவோர் குறும்பினைச் சுற்றினார் போகாமற் சூழ்ந்து. (இ - ள்.) பிழைத்திருப்பார் இவ்விடத்து யாவருமில்லை; யுகாந்த காலத்து நெருப்பையொப்ப முற்படப் பூசலில் எதிர்ந்தார் மாறுபாடு கெடத் தம்முடைய உற்றாராய ஒற்றராலே ஆராய்ந்து மிகுந்தவலியினை யுடையோர் அரணினை வளைந்துகொண்டார், ஒருவரும் தப்பிப்போகாத படி விசாரித்து எ - று. சூழ்ந்து சுற்றினாரென்க . (7) 8.4ஊர்கொலை விரைபரி கடவி வில்லுடை மறவர் குரையழ னடப்பக் குறும்பெறிந் தன்று. (இ - ள்.) கடுகின செலவையுடைய பரியை முடுக்கி வில்லினையுடைய வீரர் முழங்கெரி பரப்ப அரணினை அழித்தது எ - று. வ - று.2இகலே துணையா வெரிதவழச் சீறிப் புகலே யரிதென்னார் புக்குப் - பகலே தொலைவிலார் வீழத் தொடுகழ லார்ப்பக் கொலைவிலார் கொண்டார் குறும்பு. (இ - ள்.) மாறுபாடே துணையாக நெருப்பு நடப்பக் கோபித்துப் புகுதற்கரிய இடமென்றுபாராதே உள்புக்குப் பகற்பொழுதே ஒருவர்க்கும் தோலாதார் படக் கட்டும் வீரக்கழல் ஆரவாரஞ்செய்யக் கொலைத் தொழிலாற் சிறந்த வில்லினையுடையார் அரணினைக் கைக்கொண்டார் எ - று. (8)
1. தொல். புறத். சூ. 3, இளம். மேற். 2. 'இகலே துணையா வெரிதவழச் சீறி' : நன். சூ. 451, மயிலை. மேற். (பி.ம்.) 3. 'ஒற்றினா னாய்ந் தாய்ந்துறுவலியோரரணம்.' 4. 'ஊர்க்கொலை.' |