பக்கம் எண் :

(வ - று.)1உழுது பயன்கொண் டொலிநிரையோம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து-முழுதுணர
ஓதி 2யழல்வழிபட் டோம்பாத வீகையான்
ஆதி வணிகர்க் கரசு.

(இ - ள்.) உழுது அதன் பலத்தைக் கைப்பற்றி ஆரவாரிக்கும் ஆனிரையைப் பாதுகாத்துக் குற்றமில்லாதகூலங்களையும் விற்று நான்மறை முதலாயின பலவும் அறியக்கற்று முத்தீயை ஆராதித்துப் பொருளைச் சீர்தூக்காதுகொடுக்கும் கொடையினையுடையான் முதல் வணிகர் எல்லார்க்கும்வேந்து எ-று.

(10)

165. வேளாண் வாகை

மேன்மூவரு மனம்புகல
வாய்மையான் 3வழியொழுகின்று.

(இ - ள்.) முற்பட்ட அந்தணர் அரசர் வணிகரென்னும்மூவரும் நெஞ்சு விரும்ப மெய்ம்மையால் அவரவர் ஏவல்வழியே சென்றது எ-று.

(வ - று.) மூவரு நெஞ்சமர முற்றி யவரவர்
ஏவ லெதிர்கொண்டு மீண்டுரையான்-ஏவல்
வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவா 4னுலகுக் குயிர்.

(இ - ள்.) முன்சொன்ன மூவரும் மனம்மேவ முதிர்ந்து அவர் தாந்தாம் ஏவின காரியத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் மறுத்துச் சொல்லான் தனக்கு நீதிநூல் ஏவினசொல்வழுவானாய் முறையேநின்று சுரும்பு நிறையும் கழனியுள் உழுமவன், பூமியிலுள்ளார்க்கெல்லாம் உயிரை அனையவன் எ-று.

(11)

166. பொருந வாகை

புகழொடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்த லோம்பென வெடுத்துரைத் தன்று.

(இ - ள்.) நின் கீர்த்தியொடு மிகுதியைப்பார்த்து யாவரையும் எள்ளுதலைப் பரிகரியென்று உயர்த்திச்சொல்லியது எ-று.

(வ - று.) வெள்ளம்போற் றானை வியந்துவிரவாரை
எள்ளி யுணர்த லியல்பன்று-தெள்ளியார்
ஆறுமே லாறியபி னன்றித்தங் கைக்கொள்ளார்
நீறுமேற் பூத்த நெருப்பு.

(இ - ள்.) கடல் போன்ற சேனையினையுடையேம் யாமென்று மதித்துப் பகைவரை இகழ்ந்து அறியுமது தன்மையன்று; தெண்மையுடையார், வெம்மையாறுமாயின் ஆறியபின் அல்லது தங்கள் கையில்ஏந்தார், பொடி மூடிய தழலை எ-று.

(12)


1. தொல். புறத். சூ. 16, இளம். மேற்; நன். சூ. 341, மயிலை. மேற். (பி.ம்.)2. 'யழல்வழிவேட்டு' 3. 'வழிமொழிந்தன்று' 4. 'உலகிற்கு'