266 வினைச்சொல் பகுதியில் பொருள் சிறந்து நிற்கும்; பெயர்ச்சொல் விகுதியில் பொருள் சிறந்து நிற்கும். பொருள் சிறக்கும் இடத்தை எடுத்தும், ஏனையவற்றைப் படுத்தும், கூறுதல்வேண்டும். வேண்டவே, ஒருசொல் வினைமுற்றாயின், எடுத்தல் ஓசையால் கூறப்படும்; வினையால் அணையும் பெயராயின், படுத்தல் ஓசையால் கூறப்படும். இதுவே உரையாசிரியர் எல்லோருடைய கருத்துமாம். நடந்தவன் முதலிய மூன்றும் தெரிநிலை வினைப் பெயர்ப் பகுபதத்திற்கு எடுத்துக்காட்டு; செய்யவன் முதலியன குறிப்பு வினைப் பெயர்ப்பகுபதம். ஒத்த நூற்பாக்கள்: ‘பொருள் இடம் காலம் சினைகுணம் தொழிலின் வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே.’ நன். 131 ‘வினைபல நிகழினும் வினைஎனப் படுமே.’ மு. வீ. மொ. 6 பகுபத உறுப்புக்கள் 42. பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை முன்னிப் புணர்த்தது முடித்தனர் கொளலே. இது மேற்கூறிய பகுபதத்தினை இக்கருவிகளான் முடிக்க என்கின்றது. இ-ள்: பகுதி முதலிய ஆறனுள்ளும் ஈண்டைக்கு ஏற்பன இவை எனக் கருதிக் கொணர்ந்து கூட்டி மேற்கூறிய பகுபதத்தினை முடித்துக்கொள்க என்றவாறு. |