ஏனைய- எய்தப்படுவதன் வகைகள். ஓப்புதல்- ஒரு தொழில் உறுவிக்கப்பட்டுத்தானே போதல். இழத்தல்- தொழிற்பயன் உற்ற மாத்திரையாய் ஒருவன் கொண்டுபோகப் போதல். அறுத்தல்- சிறிது இழவாமல் வேறுபடுத்தல். குறைத்தல்- சிறிது இழக்க வேறுபடுத்தலும், பெருமையைச் சுருக்குதலும். தொகுத்தல்- விரித்தது தொகுத்தல். பிரித்தல்- தொகுத்தது விரித்தல். ஆக்கல்- மிகுத்தல். சிதைத்தல்- கெடுத்தல். இவை தொல்.சொல்.73 இல் நச்சினார்க்கினியர் உரைத்தவை. காக்கும் முதலியன தொழிற்பயன் உறுவன. ஊரும் முதலியன தொழில் உறுவன. குழைத்தல் குழைக்க வேண்டும் என்ற கருத்து இல்லாமலேயே நிகழ்த்தப்பட்டது. குத்தினானும் குத்தப்பட்டானும் தானே ஆதலின் எழுவாயே செயப்படுபொருளும் ஆயிற்று. குழையை உடையன் என்புழி, உடையன் எனக் கருதுதல்வினை; அக் கருத்தை நிகழ்த்துகின்றான் வினைமுதல். அக்குழை அவன் கருத்து நிகழ்த்தப்படும் பொருளாய்க் கிடக்கின்ற தன்மை செயப்படுபொருள். இவையும் நச்சினார்க்கினியர் உரைத்தனவே. காப்பு முதலாகப் பொருள்பற்றி ஓதினமையின் அவ்வப் பொருள்பற்றி வரும் ஏனைய சொற்களும் கொள்ளப்பட்டன. இது சேனாவரையர் கருத்து. இனி, இலக்கணக்கொத்து நூலார் செயப்படுபொருளை, |