| என்றார் ஆசிரியர் அகத்தியனாரும் என்க. அற்றேல் அவர் பொருள் ஐந்து என்றமையின் மூன்று என்றல் நிரம்பாது எனின், அற்றன்று; காரணத்தையும் கருவியையும் இயற்றுதற் கருத்தாவையும் ஏவுதல் கருத்தாவையும் பொதுப்பட முறையே கருவி கருத்தா என்றமையின் வரும் அவ்வைந்தும் நேர்ந்தார் என்பது. கருத்தா எனினும் வினைமுதல் எனினும் ஒக்கும். வினை முதலாவது கருவி முதலாயின காரணங்களைத் தொழில்படுத்துவது. அதுதான் இயற்றும் வினைமுதலும் ஏவும் வினை முதலும் என இருவகைப்படும். கருவி- காரணம்- ஏது- நிமித்தம் என்பன தம்முள் வேறுபாடு உடையவேனும், ஒத்த பொருளினவேயாம். கருவியாவது வினைமுதல் தொழிற் பயனைச் செயப்படு பொருட்கண் உய்ப்பது. அதுதான் காரகக் கருவியும் ஞாபகக் கருவியும் என இரு வகைப்படும். காரகமாவது தொழிலை இயற்றுவிப்பது. ஞாபகமாவது அறிவிப்பது. காரணம் முதற்காரணம் துணைக்காரணம் என இருவகைப்படும். முதற்காரணமாவது காரியத்தொடு ஒற்றுமை உடையது. துணைக்காரணமாவது முதற்காரணத்துக்குத்துணையாய் அது காரியப்படுங்காறும் உடன் நிகழ்வது. தச்சனால் இயற்றப்பட்ட வையம். அகத்தினால் உரைக்கப்பட்ட தமிழ் என் பனபோல்வன இயற்றும் வினைமுதல். அரசனால் இயற்றப்பட்ட தேவகுலம், தேவரால் தரப்பட்ட திரு என்பன போல்வன ஏவும் வினைமுதல். மண்ணான் இயன்ற குடம், பொன்னான் இயன்ற பணி என்பன போல்வன முதற்காரணம். |