சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-42163

பொருண்மைக் கண்ணும். நாயால் கோட்பாட்டான்-சாத்தனான் முடியும்
இக்கருமம்-என்பனபோல ஒன்றான் ஒன்று தொழில் உறுதல் என்னும் வினைமுதல்
பொருண்மைக் கண்ணும், வாணிகத்தான் ஆயினான் என்பதுபோல ஒன்றான் ஒன்று
ஆதல் என்னும் காரக ஏதுப் பொருண்மைக் கண்ணும், காணத்தால் கொண்ட அரிசி
என்பதுபோல ஒன்றான் ஒன்றைக் கோடல் என்னும் கருவிப் பொருண்மைக் கண்ணும்,
எண்ணொடு விராய அரிசி என்பதுபோல ஒன்றனொடு ஒன்று மயங்குதல் என்னும் உடன்
நிகழ்ச்சிப் பொருண்மைக் கண்ணும்,

ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் என்பது போல ஒன்றனொடு ஒன்று இயைந்து
ஒருவினை ஆதல் என்னும் உடன் நிகழ்ச்சிப் பொருண்மைக் கண்ணும்,

‘மலையொடு பொருத மால்யானை’

என்பதுபோல ஒன்றனொடு ஒன்று இயைந்து வேறுவினை ஆதல் என்னும் உடன்
நிகழ்ச்சிப் பொருண்மைக் கண்ணும், (பொருதல் யானைக்கு அல்லது மலைக்கு
இன்மையின் வேறு வினை ஆயிற்று.)

‘பொன்னொடு இரும்பு அனையர் நின்னொடு பிறர்’

என்பது போல ஒன்றனொடு ஒன்று இயைந்து ஒப்பு அல்லா ஒப்பினை உரைத்தல்
என்னும் உடன் நிகழ்ச்சிப் பொருண்மைக் கண்ணும் (பொன்னொடு இரும்பை
உவமித்தலை ஒப்பர் நின்னொடு பிறரை உவமிக்குமிடத்து என்பதாம்),

கண்ணால் கொத்தை- காலான் முடவன்- என்பன போலச் சினைவிகாரத்தை
முதல்-மேல் ஏற்றிக் கூறும் பொருண்மைக் கண்ணும், மதியொடு ஒக்கும் முகம்
என்பதுபோல ஒப்பின் கண்ணும், சூலொடு கழுதை பாரம் சுமந்தது என்பது போலக்
கட்புலன் ஆகா ஒருவினைக்கண்ணும் வரும் வேறுபாடும் அறிக.