பக்கம் எண் :

108 பாசவதைப் பரணி

705.

ஆயா சொற்ற சொலுங்கிளிபோல்
      அலறிப் பயனை யறியாத
மாயா வாதப் பேய்தனக்கும்
      வாரீர் நிறைய வாரீரே.

(29)
   

706.

சுருதி யிறையா கமஞ்சொன்ன
      துணிவை யறிந்தார் போன்றிருந்து
கருதிப் பேதா பேதங்கள்
      காட்டும் பேய்க்கும் வாரீரே.

(30)
    

707.

உலவா நிற்குந் தனிப்பிரமம்
      ஓட்டைச் செவியி னுணர்வாகி
நிலவா நிற்குஞ் சத்தமெனு
      நெட்டைப் பேய்க்கும் வாரீரே.

(31)
  

708.

ஏதஞ் செய்து வரும்பிறவி
      இரிக்கு முபாய மறியாது
வாதஞ் செய்து கலகலென
      வரும்பேய் தனக்கும் வாரீரே.

(32)
  

709.

உள்ளப் படுவா ருள்ளிருக்கும்
      உலப்பி லொளியை யுணராதே
கள்ளத் தொழும்பு செய்துழலும்
      கருமப் பேய்க்கும் வாரீரே.

(33)
    

710.

தொகுக்கும் பதியே முதன்மூன்றும்
      தொடரு முத்தி தனிலுமே
வகுக்குஞ் சைவப் பேயுளதேல்
      வாரீ ரதற்கும் வாரீரே.

(34)
   

711.

உண்டா லொழிய வில்லையெனா
      உலவா வினைக ளுண்டுண்டு
தண்டா முத்தி சாதிக்கும்
      சமணப் பேய்க்கும் வாரீரே.

(35)

705. ஆயா - ஆயாதனவாய்.

707. இதிற் குறிப்பிக்கப்பட்டவர்கள் சப்தப்பிரமவாதிகள்.

708. இவர்கள் தார்க்கிகர்கள்.