பக்கம் எண் :

  

4. பேய்களைப் பாடியது

86.

பஞ்ச வாயிலெனும் வஞ்ச யானைவழி
      பஞ்சு போன்மெலிய நெஞ்சுபோய்
அஞ்சு வாரையட நஞ்சு போலுழலும்
      அஞ்சு பூதகணம் விஞ்சுமே.

(1)
   

87.

தொல்லை யேதொடரு மல்ல லூழின்வழி
      தொல்லை நீள்பிறவி புல்லவே
வல்லை போகலகை யெல்லை போகியன
      வல்ல வாசிறிது சொல்லுவாம்.

(2)
 

வேறு

88.

கொடியவே பிறவியெனக் குறிக்கின்ற வறிவற்று
முடியவே கெடுகின்ற மூடரே முழுப்பேய்கள்.

(3)
   

89.

எக்காலங் களுமறியா விழுதையரே கழுதல்லால்
முக்காலங் களுமறிந்து மொழிவனவோ முழுப்பேய்கள்.

(4)
 

வேறு

 

90.

ஒன்றென நின்றன சிலவே யுகள முரைப்பன சிலவே
அன்றென நின்றன சிலவே யாமென நின்றன சிலவே.

(5)
   

91.

உருவுரு வென்றன சிலவே யுபய முரைப்பன சிலவே
அருவரு வென்றன சிலவே யகணித மென்றன சிலவே.

(6)
  

 

92.

இலதில தென்றன சிலவே யிருமை யுரைப்பன சிலவே
அலதல தென்றன சிலவே யருவினை யென்றன சிலவே.

(7)

86. பஞ்சவாயில் - ஐம்பொறிவாயில். யானை யென்றது புலன்களை ; “உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” (குறள்) ; “ஐம்புலமாந் தறுகண்மை யானையதி னானைகள்” (277) என்பர் பின்.

87. எல்லை போகியன - அளவு கடந்தன.

90. யுகளம் - இரண்டு. “ஒன்றென்று நின்றசில பலவென்று நின்ற சில வுபயத்து நின்றசிலபேய், அன்றென்று நின்றதனை யாமென்று சொல்லி யுட னலகிட்டு விட்டசிலபேய்” அஞ்ஞவதைப்.

91. அகணிதம் - கணக்கற்றது.