பக்கம் எண் :

பாசவதைப் பரணி 27

தேவி கோயில்

 

வேறு

 
151.

கூறு வேதமுஞ் சூழு தற்கரும்
      கோயி லுக்குநா னளவை கூறுகேன்
ஆறு நாலுதிக் குள்ள நீளமே
      அம்மை கோயிலுக் களவை யாவதே.

(5)
   

152.

கமல யோனியே முதல தேவரும்
      காணு தற்கருங் ககன மண்டலத்
தமலை கோயில்கண் டமைய வோதுமா
      றரிய தாகுமெப் பெரிய ராலுமே.

(6)
 

வேறு

153.

உன்னு தோறு முணர்விற்கெட் டாதுயர்
      உண்மை ஞான மொருங்குடன் சூழ்மதில்
மன்னு கோபுர மாமறை யுச்சியில்
      மலிவுற் றோங்கு மகாவாக்கி யங்களே.

(7)
   

154.

அண்ட ரண்டநூ றாயிர கோடிகள்
      அணுக்க ளாகிமற் றங்கங் குலவிட
மண்டு கின்ற பரம வியோமமே
      மண்ட பம்முயர் மாளிகை சூளிகை.

(8)
   

155.

பசையி லிவ்விவ கார திசையிடைப்
      பயிற்சி நீங்கியப் பார மார்த்திக
வசையி லத்திசை யுள்ளதன் வாய்மையை
      வகுக்கொ ணாதது வாங்மனோ தீதமே.

(9)
   

156.

பந்தர் வானம் விதான மந்தாகினி
      பத்தி வாயி லவித்தை கபாடமே
சந்த்ர சூரிய ருட்களஞ் சக்கரம்
      தண்டு சூலஞ் சலியாத காவலே.

(10)

151. “ஆதி நாலுமா மறைகள் சூழ்வதற் கரிய கோயிலுக் களவு கூறவோ, ஓது நாலிரண் டுடனிரண்டுதிக் குண்டமேனியக் கோயிலுள்ளதே” அஞ்ஞவதைப்.

152. கமலயோனி - பிரமதேவன்.

154. சூளிகை - உச்சியிலுள்ள மண்டபம்.

155. பசை - அன்பு. அத்திசையுள் அதன். வாங்மனோதீதம் - வாக்கிற்கும் மனத்திற்கும் அதீதமானது.

156. பி - ம். ‘பரந்த வானம்’