பக்கம் எண் :

  

6. தேவியைப் பாடியது

171.

வரமி குத்தன மறைகள் பற்பல வருட முற்றிலவே
பரம தற்பத வமல சிற்கன பதயு கத்தினளே.

(1)
   

172.

அணிய பற்பல பிறவி யுற்றதி னமிழு மத்துயரே
தணிய வற்புத வமுத முற்றருள் தனத டத்தினளே.

(2)
 

வேறு

173.

முறுகித் துயர்வாரியின் முழுகிப் பலகாலமும்
      முடலைச்சுமை யேகொடு முடிவற்றயர் வேனையுமே
குறுகிப்பணி வாயருள் குலவிப்பணி வாயொரு
      குறையற்றிரெ னாநனி குழையுற்றலை காதினளே.

(3)
 

வேறு

 

174.

அழிவற மிகுந்த காரிருள்
        அதனிடை மறைந்து நாடொறும்
    அருவினை படர்ந்து மூடுற
        அயர்வுட னிரங்கு வேனையுமே
ஒழிவற நிறைந்த பேரருள்
        உருவொடு நடந்து வாழ்கென
    உரையுணர் விகந்த மேன்மைய
        ஒருமொழி பகர்ந்த வாயினளே.

(4)
 

வேறு

 

175.

ஈனந்தம் வசமாக வெழுபிறவிச் சுழல்வோரும்
ஆனந்தக் கடலாட வருள்பொழியும் விழியினளால்.

(5)
   

176.

வாக்கினொடு மனத்தினுக்கு மருவாத பொருளதனைத்
தூக்கினொடு பொருள்படுத்திச் சொல்லுமா றெவ்வாறே.

(6)
   

177.

ஒழியாம னிறைந்தவவட் குருவமில்லை யேயென்கோ
அழியாம லாளவந்த வருட்கோலங் கண்டுமே.

(7)

* பி - ம். காளி நிலை.

172. பி - ம். ‘பிறவியுற்றதி னமிழத்துயரே’, ‘யுற்றதிகழுமத்துயரே’

173. பி - ம். ‘முலைச்’

177. “மருவுறா ததற்குரைக்கும் வடிவமில்லை யென்னவோ, கருவுறாம லாளவந்த கருணைமேனி கண்டுமே” அஞ்ஞவதைப்.