பக்கம் எண் :

  

2. கடை திறப்பு

18.

அருவின ராகியு மலரா மருவுரு வாகியு மலராம்
உருவின ராகியு மலரா மொருவரை நாடியர் திறமின்.

(1)
 

வேறு

 

19.

அலையு மீனமு மானமு மின்றியே
      அன்றி யோடுநா வாய்க்குமெட் டாததாய்
நிலையுந் தாழ்வு மிலாததோ ரானந்த
      நீள்க டற்றுறை யாடியர் திறமினோ.

(2)
   

20.

அங்க நாடியர் நீடிய வெழுபிறப்
      பாழி யேழ்கடந் தப்புறஞ் சென்மறை
வங்க நாடியர் பீடிய லுளமெலா
      மகத நாடியர் வருகடை திறமினோ.

(3)
   

21.

அல்ல நாடிய ரறுபகை வளர்ப்பவர்
      ஆக லாலிக லப்பகை யாவையும்
கொல்ல நாடியர் பேரருட் சிந்துநற்
      கோல நாடியர் குளிர்கடை திறமினோ.

(4)

18. அருவினர் ஆகியும் அலராம்.

பி - ம். ‘அருவனர்’

19. அலையும் ஈனமும் மானமும் ; அலைகளும் மீனமும் (மீன்களும்) அளவும் என்பது மற்றொரு பொருள். நாவாய்க்கும் - நாவையுடைய வாய்க்கும், கப்பலுக்கும். “அலை தீர்வதொர் துறைநாடியர் திறமின்” அஞ்ஞவதைப் பரணி.

20. அங்க நாடியர் - சரீரத்தை ஆராய்பவர்கள். மறை - மந்திரம். அகதம் நாடியர் - அழிவற்றதை நாடுபவர்கள். கடை - வாயில்.

இதில் அங்க நாடு வங்க நாடு மகத நாடு என்னும் நாட்டின் பெயர்கள் தொனிக்கின்றன.

பி - ம். ‘ஏழ்கடலப்புறம்’ ‘உளமெலோமகத’

21. அல்லாதவற்றை நாடுபவர்கள் ஆறு பகைகளை வளர்ப்பவர்களே. ஆறு பகைகள் காமம் முதலியன. இகல் - முரணுகின்ற. சிந்து - கடல். பேரருட் சிந்துவென்றது குருவை. இதில் கொல்லம், சிந்து என்னும் நாடுகளின் பெயர்கள் தொனிக்கின்றன.