அச்சிடுதற்கு ஆங்குள்ள பிரபுக்களாகிய நகரத்து வணிகர்களை அழைத்து அவரவர் கருத்திற்கு இயன்ற அளவில் பொருளுதவி செய்யுமாறும் பணித்தார்கள். அப்பிரபுக்களும் அக்கட்டளை சிரமேற்கொண்டு அவ்வண்ணமே செய்தார்கள். அவ்வணிகர்குல மக்களது பெருந்தகைமையும் தருமசிந்தையும் சிவபத்தியும் பெரியார்ப் பேணலும் தமிழபிமானமும் பிறவுயர்வும், என்னால் மட்டுமன்றிப் பலராலும் பெரிதும் பாராட்டற்பாலவேயாம். அவர்கள் பெயரும் அறித்த பொருளின் தொகையும் செலவும் எச்சமும் பின்னர்க் குறித்திருக்கின்றேன். பின் அச்சுவாமிகள் கட்டளைப்படி முறையே பாயிரவிருத்தி முதலாயின அச்சிடுமாறுகருதிக் குரோதி வருடம் தை மாதம் தஞ்சை சென்றேன். சென்று வேலை தொடங்கிய சின்னாளுள் சுரம் கண்டு உணவு ஒழித்துக் கிடைப்படுத்திற்றாகலின் அச்சிடும் முயற்சியும் நின்றது. அக்காலை எனக்கு மிக்க நண்பினரும் வடமொழி தென்மொழி ஆங்கில நூலாராய்ச்சியே பொழுதுபோக்கும் விளையாட்டாக உடையாரும் வைத்திய நூல் பயிற்சியும் அநுபவமுமுடையாரும் பிரபுசிகாமணியும் வள்ளலுமாகிய அரித்துவார மங்கலம் மகா-ரா-ரா-ஸ்ரீ வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளியாரவர்கள் என்னைத் தம் ஊர்க்கு அழைத்துச்சென்று பல நன்மருத்துவரைக் கொண்டு மருந்தளித்தும் வேதமுணர்ந்த அந்தணரைக் கொண்டு கிரகசாந்தி முதலாயின செய்தும் பிணிதீர்த்து வெண்பொற்காசு முந்நூற்றின் மேலாக என் நிமித்தம் செலவு செய்ததூஉமன்றி, அப்பொழுது தேகவன்மை எனக்கு இன்மையால், தமக்குள்ள இன்றியமையாதனவாகிய உலகியல் பலவற்றையும் கருதாமல் தாமே பரிசோதித்தும் பிறரைக்கொண்டு பரிசோதித்தும் இப்புத்தகத்தைப் பதிப்பித்து முடித்துப் பேருதவி புரிந்தார்கள். அவர்கள் செய்த உதவியே அன்றிக் குணமாட்சியும் பன்னாள் உடனிருந்து பழகித் தெரிந்தேனாகலின் அவர்களது நட்பை எழுமையும் மறப்பேன் அல்லேன். இனி நூல் மரபு முதலாய பிறவும் முறையே முடியுமாறு எல்லாம் வல்ல இறைவனது நற்றாளையும், சோழவந்தானூரில் எங்கள் குலகுருவாக எழுந்தருளி நூற்றைம்பது வருடத்தின்முன், அடியாரது வேண்டுகோட்கு இணங்கி ஒரு தினத்தில் தாமே |