தொல்காப்பியம் மீன்றிகழ் கண்ணி மணாளன் விரிகலை தோன்றிய வுருவெனத் தான்றிகழ் செல்வி கான்ற மலையக் குடமுனி நிதிக்கோ னேன்றுறு நமனுயிர் தான்றெறு சேய்முடி நாக ராய னாரத னாதியா மூன்றுசங் கத்தினு மூன்றிய நல்லிசைச் சான்றவ ருடனவர் போன்றமுப் பான்முறை யூன்றரு மயறப வுரைத்தோன் முதலாத் தோன்றருட் புலவரு மீன்றிகழ் கொடியாற் செந்தமிழ் வளர்த்தருண் மைந்துறு வேந்தருஞ் சிந்தனை மலர்மிசைச் சேர்ப பைந்தமி ழியலுரை பகர்தரற் பொருட்டே. |
ஆசிரியர் அகத்தியனார் முத்தமி ழகத்திய முதனூ லுரைத்த வித்தக னடிமலர் விளக்குஞ் சித்தநின் றுத்தமச் செந்தமி ழியல்பே. |
ஆசிரியர் தொல்காப்பியனார் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியத்துரை நல்குக வெனவது நவின்ற தொல்காப் பியனடித் தோயுமா ருளமே. |
இவை பாடல்சால் செந்தமிழ்ப் பாண்டி நன்னாட்டிடைக் கூடல்சால் சங்கம் குலவிய மதுரை ஆலவாய் அணிநகர் மேல்வயின் விளங்கி, நலம்பாடுறவரும் இலம்பாட்டினர்க்குச் சூழவந்தான்றபு சோழவந்தானூரில், வேளாண் குலதிலகனாகிய சண்பகம்பிள்ளை மரபின் விளங்கிய அரசப்பபிள்ளை மகன் சண்முகனென்னும் இயற்பெயருடைய தொல்காப்பியத் தொண்டன் தான் எடுத்துக்கொண்ட நூலின் உரை இடையூறின்றி இனிதுமுடிந்து நிலவுலகத்து நின்று நிலவுமாறு கலியுகம் ஐயாயிரத்துநான்கின் செல்லாநின்ற சுப கிருது யாண்டு பங்குனித் திங்கள் உத்தரத்து அன்று, திருவாலவாயுடையார் ஆலயத்துள் சங்கப்புலவர் சந்நிதியில் கூறின என்பது! |