தொல்காப்பியம் 3. பாயிர விருத்தி சிறப்புப் பாயிரம் வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவ னிலந்தரு திருவிற் பாண்டிய னவையத் தறங்கரை நாவி னான்மறை முற்றிய வதங்கோட் டாசாற் கரிறபத் தெரிந்து மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. (என்பது- சூத்திரம்) |
இச்சூத்திரம் என்ன பெயர்த்தோ எனின், சிறப்புப் பாயிரம் என்னும் பெயர்த்து என்பது. இனி இப்பாயிரம் செய்தார் யாவர் எனின், இந்நூலாசிரியருடன் கற்ற ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் என்பது. இனி, நூல் செய்தான் பாயிரம் செய்தற்கு உரியன் அல்லனோ எனின், |