பக்கம் எண் :

18பாயிர விருத்தி

“தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந்
  தான்றற் புகழ்த றகுதி யன்றே’’

என்றார் ஆகலின், அல்லன் என்பது.

இனிப் பாயிரம் செய்தற்கு உரியார் யாவர் எனின், தன் ஆசிரியனும் தன்னொடு கற்றோனும் தன்மாணாக்கனும் என மூவருள் ஒருவனாம் என்பது.

இனிப் ‘பாயிரம்’ என்ற சொற்குப் பொருள் யாதோ எனின், நூற்குப் புறமாவன கூறலால் புற உரையாம் என்பது.

இனி நூல் உரைப்பான் புக்கு முதற்கண் புறவுரை உரைக்கப் புக்கது என்னை எனின்,

“ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
 பாயிர மில்லது பனுவ லன்றே.’’

எனவும், 3கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போலப் பருப்பொருட்டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண் பொருட்டாகிய நூல் இனிது விளங்கும் எனவும் 4அது கேளாக்கால் குன்றுமுட்டிய குரீஇப்போலவும் குறிச்சிபுக்க மான்போலவும் மாணாக்கன் இடர்ப்படும் எனவும், அப்பாயிரந்தான் நூற்குப் புறனாவைத்தும் 5கருவமைந்த மாநகர்க்கு உருவமைந்த வாயில் மாடம்போலவும், 6தகைமாண்ட நெடுஞ்சுவர்க்கு வகைமாண்ட பாவைபோலவும்,7அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும்போலவும், நாண் துறவாக் குலமகட்கு மாண் துறவா அணியும் ஆடையும்போலவும், தலை அமைந்த யானைக்கு வினை அமைந்த பாகன் போலவும், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போலவும் அந்நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றாம் எனவும் முந்துநூல் கூறலின், எந்நூலை உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைத்தல் மரபாயிற்று என்பது.


1 இளம்பூரணருரை மேற்கோள்
2 இறையனார் களவியலுரை மேற்கோள்.
3 நக்கீரனார்
4 நக்கீரனார்
5 நக்கீரனார்
6 நக்கீரனார்
7 நக்கீரனார்