பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்19

இனிப் பாயிரம் இரண்டு வகைப்படும்; பொதுவும் சிறப்பும் என. அவற்றுள், பொதுப்பாயிரம் என்பது எல்லா நூல்முகத்தும் உரைக்கப்படுவது; சிறப்புப் பாயிரம் என்பது தன்னால் உரைக்கின்ற நூற்கு இன்றியமையாதது.

இனி அவ்விருவகைப் பாயிரத்திற்கும் கொழுவும் வாயில் மாடமும் பாவையும் உவமம். நூற்குத் துன்னூசியும் நகரும் சுவரும் உவமம். கேளாக்கால் குரீஇப்போலவும் மான்போலவும் இடர்ப்படல் அவை இரண்டற்கும் பொது.

கொழுத் துன்னூசி நுழைதற்கு வழியாக்கல் உடைத்து. பாயிரம் நூல் நுழைதற்கு வழியாகல் உடைத்து. வாயில்மாடம் நகர்க்குள் செல்லற்கு வழியாதலொடு அணிசெயல் உடைத்து. பாயிரம் நூலுள் செல்லற்கு வழியாதலொடு நூற்கு அணிசெயல் உடைத்து. பாவை சுவர்க்கு அணி செயலுடைத்து. பாயிரம் நூற்கு அணிசெயலுடைத்து பாயிரம் கேளா மாணாக்கன் நூலினை முட்டி இஃது உணரற்பாற்று அன்று என மீளலும், மீளாது செல்லினும் தொன்னூற்கு அஞ்சித் தடுமாறலும் உடையன் ஆகுதலின் குன்றுமுட்டிய குரீஇப் போலவும் குறிச்சி புக்க மான்போலவும் இடர்ப்படுவான்.

கொழு என்பது ஊசித் தொளையின் மேலுள்ள காலினை துன்னூசி என்பது தைத்தல் தொழில் செய்யும் நூல்கோத்த தொளையை உடைய ஊசியின் காதினை, கொழுவுதலால் கோல்கொழு எனப்பட்டது.

பொதுப்பாயிரத்திற்குத் திங்களும் அணியும் பாகனும் உவமம். நூற்கு ஆகாயமும் குலமகளும் யானையும் உவமம்.

திங்கள் கலையின் வளர்ச்சிக்குத்தகப் புறத்து இருள் நீக்கி ஆகாயத்தை விளக்கும். அணி அழகு செய்யும். பாகன் அடங்கா யானையை அடக்கித் தன் குறிப்பின் வழி நடத்தும். பொதுப்பாயிரம் தன்னை உணர்தலின் வளர்ச்சிக்குத்தக இடர்ப்பாடு என்னும் இருள் நீக்கி நூலினை விளக்கும்; அந்நூற்கு அழகு செய்யும்; மாணாக்கர் உணர்ச்சிக்குப் பொருளான் அடங்காது தோன்றும் நூலினைத் தன் குறிப்பான் அடங்குமாறு காட்டி நடத்தும்.

சிறப்புப் பாயிரத்திற்கு ஞாயிறும் ஆடையும் கற்புடையாளும் உவமம். நூற்கு ஆகாயமும் குலமகளும் கணவனும் உவமம்.