பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்167

எருமை கன்று இறந்த பின்னும் பால் கறக்கும் இயல்பிற்று ஆகலான் கன்றின்மேல் வைத்த அன்பால் பால் சுரத்தல் இன்மையின் அஃது இன்று. ஆவும் அத்தன்மைத்தாம் எனின் அது கன்றின் பொருட்டன்றிப் பால் கறவாது என்பது 1தோற்கன்று காட்டிக் கறவார் கறந்த பால் பாற்பட்டார் உண்ணார். எனச் சான்றோர் கூறுமாற்றான் உணரப்படும். மேய்ப்போர்க்கு அடங்கி அவன் குறிப்பின் ஒழுகி இரை கோடலின் பணிவு உடைத்து. ஆடு மேய்ப்போர்க்கு அடங்காது தான் நினைத்தாங்குச் சென்று இரை கோடலின் பணிவு இன்று. அகமும் புறமும் மாறின்மையின் செப்பம் உடைத்து. தோணி கரைச்செல்லும் இயல்பிற்று எனத் தன்னைப் புறத்தே காட்டிச் சமயம் நேர்ந்துழிக் கடலுள் ஆழ்த்தும் இயல்பிற்று ஆகலின் அகமும் புறமும் மாறாய வாற்றால் செப்பம் இன்று.

இவ்வாற்றான் குரங்கு முதலாய ஆறும் மாணாக்கன் அல்லாதாற்குப் பிண்ட உவமம் ஆகலின், எரி முதலாய ஐந்தும் இன்சொல் முதலாய ஐந்து குணத்தைக் களைதலின் நகை இன்மை முதலாய ஆறு குற்றமும் ஒருங்கு உடையான் மாணாக்கன் ஆகாதான் என்பது பெறப்பட்டது.

இனித் தூய்மை முதலாய பிற பொதுஇயல்பு உரைக்கற்பால. அன்னம் நீர் வாழ்பறவை ஆதலின் புறந்தூய்மை உடைத்து. தன் தாய் தந்தை வாசம் செய்து ஒழுகிய தடாகத்தில் தானும் ஒழுகலின்றிப் பறக்கும் இயல்பு கைவந்த பின்னர்த் தன் கருத்து ஒப்பப் பிறிதிடம் சேறலின் அவ்ஒழுக்கம் இன்று. கிளி தன் தாய் தந்தை ஒழுகியவாறே அவை வாழ்ந்த மரனைத் தானும் நீங்காது ஒழுகலின் அஃது உடைத்து. பயிற்றுவார் சொல்லியவண்ணம் கள்வன் அல்லாதானையும் கள்வன் எனவும் கள்வனையும் நல்லன் எனவும் கூய் அழைத்தலின் வாய்மை இன்று. நன்னீரம் தனக்கு இயற்கையாகிய இன் சுவையே காட்டலின் வாய்மை உடைத்து. மிதக்கும் இயல்புடைய பொருளை வெளிக்காட்டி ஆழும் இயல்புடைப் பொருளைக் காட்டாது மறைத்து விடலின் அழுக்காறு உடைத்து. நெய்யரி தான் பற்றிய மரன் காயும் கனியும் உடையவாகிச் செல்வமுறக் கண்டும் அதனை அழுக்காற்றான் மறையாமல் தான் முன் இருந்தபடியே கிடத்தலின் அஃது இன்று. பழுத்து உதிர்தற் பாலவாகிய பயனில்லாத மட்டையினைத் தான் பற்றிக் கிடத்தலின், வெஃகும் உள்ளம்


1சிறுபஞ்சமூலம்