எனவும் கூறினார் ஆகலின், கற்றார்மாட்டும் குற்றம் சில காணப்படுமாயினும் அவற்றைப் புறத்தே தள்ளி அவரது குணத்தையே அகத்துள் கோடலும், அதனொடு அவர்பால் கேட்பவற்றுள் ஒன்றும் மறவாத இயல்பு உடையனாதலும், அதனொடு சொல்லிய பொருண்மை சொல்லியாங்கு உணர்ந்தும், சொல்லிய பொருளொடு சூழ்ந்து நன்குணர்ந்தும், தான் கேட்டு மனத்துள்கொண்ட பொருளை வாயில் கொணராது மறைத்தலின்றிப் பிறர்க்கு உரை யிடத்தே நூல்கலப்பாகும் என்றார் ஆகலின், பிறர்க்கும் உரைத்தலும் என. அவ்ஆறு தன்மையும் ஒருவற்கு முன்நிகழாவாயின் பயன் படுகோடல் வினையும் நிகழாமையின் அவை முதற்காரண வினை எனப்பட்டன. இனி அன்னம் ஏனைய நீர்வாழ் பறவைபோல நீர்விளையாட்டைப் பொருளாகக் கொள்ளாமல் பூ எனப்படுவது பொறிவாழ் பூவே எனவும், 1பூவிற்குத் தாமரையே எனவும் 2திருவளர் தாமரை எனவும், சான்றோர் புகழும் தாமரைப் பூவையே வேட்டல் உடைத்து. 3அற்ற குளத்தி னறுநீர்ப் பறவை என்றார் ஆகலின், நீர் வற்றிய காலைச் சார்ந்து ஒழுகலின்றிப் பிறிதொரு நீர்நிலையைச் சேர்தலும் உடைத்து. கிளி தான் சார்ந்த மரன் வேனிலான் உலர்ந்து காயும் கனியும் இலையும் இன்றி வற்றியகாலையும் அம்மரனை நீங்காது சார்ந்து ஒழுகல் உடைத்து. சார்ந்து ஒழுகினும் உற்றுழி உதவலும் உறுபொருள் கொடுத்தலும் இன்று. நன்னீரம் விடாய் தீர்த்து உற்றுழி உதவலும் நெல் முதலாய உறுபொருள் படைத்துக் கொடுத்தலும் உடைத்து. உலகிற்கு ஞாயிறு செய்யும் நன்மை பலவற்றுள் ஒன்றானும் கருதல் இன்றி அதன் சூடு ஒன்றே கருதிக் கொதித்தல் உடைத்து. நெய்யரி கோதினைப் புறத்தே தள்ளித் தேன் முதலாய நற் பொருளையே அகத்துள் கோடல் உடைத்து. பரல் முதலாய பருப்பொருளைத் தாங்கலன்றி மணல் முதலாய நுண்பொருளைத் தாங்காது கீழ் ஒழுகவிடல் உடைத்து.
1திருவள்ளுவமாலை. 2திருக்கோவை. 3மூதுரை |