பக்கம் எண் :

172பாயிர விருத்தி

ஆடு பக்கல் நின்று மேய்ப்போன் உணர்த்தினும் அக்காலையே அதனை மறந்து நெறி பிழைத்தலின் யாதொன்றும் நினைத்தல் இன்று. ஆனேறுபோலவே தானும் அகத்துள் கொண்டவற்றைப் பிறரும் உணருமாறு மீண்டும் வாயில் கொணர்ந்து அசைத்தல் உடைத்து.

தோணி பிறர் ஏற்றிய பொருளைக் கரையின் விடுத்தல் அன்றிக் கடலுள் பன்முறை சென்று மீளினும் தான் அதன் ஆழத்தை அறியாமலும் அங்குள்ள பொருளை முகவாமலும் மிதத்தல் உடைத்து. மிதவாது அமிழ்ந்து கடல் ஆழத்தைக் கண்டு தான் அதன் பொருளை முகந்தாலும் மீண்டும் வெளியில் கொணர்தல் இன்று.

இவ்வாற்றான் எரி முதலாயின குணத்தைக் களைதலின் அக்குற்றம் ஆறும் உடையான் மாணாக்கன் ஆகாதான் என்பது பெறப்பட்டது.

இனி இலக்கண விளக்க நூலார் முதலாயினார் பாலும் நீரும் பால் படப் பிரித்தல் அன்னத்து இயல்பு என்றார்; அது பொருந்தாது. என்னை? மதிநுட்பத்தோடு நூலறிவும் வாய்ந்தபின்னரே குணம் குற்றத்தையேனும் பிறவற்றையேனும் பிரித்து உணரும் ஆற்றல் உளதாவது அன்றிக் கல்வி கற்பான் புக்க மாணாக்கர் இயல்பாகாமையின் என்பது.

இன்னும் அவர் கிளந்தவா கிளத்தல் கிளியினது இயல்பே என்றார். அது பொருந்தாது. என்னை? சொல்லிய பொருண்மை சொல்லியாங்கு உணர்தலும் சூழ்ந்து நன்கு உணர்தலும் மாணாக்கர் இயல்பு ஆவதன்றிக் கிளந்தவா கிளத்தலால் பொருள் உணர்ந்தார் என்பது பெறப்படாமையானும் பொருள் உணராவிடில் பயனின்மையானும் என்பது.

அவர் நன்னிறம் எனக் கொண்ட பாடமும் அதன் தன்மையும் பொருந்தாமை மேற்கூறினாம்.

அவர் நல்லவை அகத்திட்டு, நவை புறத்து இடுவது நெய்யரி என்றார்; அது பொருந்தாது. என்னை? நல்லவை இவை, நவை இவை என நூல் அறிவான் அன்றி உணரல் கூடாமையானும், அவர் கூறியவாறு பாலும் நீரும் பால்படப் பிரித்தலும் நல்லவை அகத்திட்டு, நவை புறத்து இடு தன்மையுள் அடங்கலின் அதனை வேறாக அன்னத்து இயல்பு எனக் கூறாமல் பயனின்மையானும் நூலறிவான்