பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்175

முப்பான்மையர் ஆக்கல் கூடாமையானும், மாணாக்கரை முப்பாலராகப் பகுத்தார்க்கு ஆசிரியரையும் அங்ஙனம் பகுத்தலே முறையாகலானும் அவ்வாறின்றிக் கூறிய அவர்தாமும் மாணாக்கர் ஆகாதாரையும் முப்பான்மையர் ஆக்காது களி மடி மானி எனப் பகுப்பின்றியே கூறலானும் ஆசிரியர்க்கு உவமமாகக் கூறிய நிலனையே ஈண்டு மண் என இடை மாணாக்கர்க்கும் உவமமாக்கல் கூடாமையானும், பல தன்மை உடைமையின் அவ்வேறுபாட்டால் கூறலும் அமையும் எனின், அத்தன்மையைத் தெரிவரும் பெருமை முதலாக ஆசிரியர்க்கு விதந்து கூறியாங்கு மாணாக்கர்க்கும் விதந்து கூறாமையின், அத்தன்மையே மாணாக்கர்க்கும் ஒக்கும் என மயங்கும் ஆகலானும், கிளியை அன்னத்தினும் சிறப்புடைத்தாக முன்னோர் கூறி இருப்ப, அம்முறை நோக்காது கிளந்தவா கிளத்தல் என்னும் ஒப்புமைக் குணமாகப் பிறிது ஒன்றைத் தம் மனத்துள் கொண்டு அன்னத்தை முதல் மாணாக்கர்க்கும் கிளியை இடை மாணாக்கர்க்கும் உவமமாக்கல் கூடாமையானும், இல்லிக் குடம் எத்துணைக் காலம் நீர் பெய்யினும் ஒழுகவிடலின் பயன் இன்மையான் அதனை மாணாக்கர் ஆகாதார்க்கு உவமமாக்கல் ஓராற்றால் கூடினும் கூடுமன்றி, மாணாக்கருள் கடையாயார்க்கும் உவமம் ஆக்கல் எவ்வாற்றானும் ஏலாமையானும், அக்குடம் நீர் போல்வன அன்றிப் பிற பெய்யின் கழியாது ஏற்றலின் நீர் பெய் இல்லிக்குடம் நெய் பெய் இல்லிக்குடம் அல்லது பிறபொருள் பெய் இல்லிக்குடம் என யாதானும் ஓர் அடையின்றிக் கூறி, அக்குடத்தால் கடை ஆகாமையானும், ஆடும் எருமையும் மாணாக்கர் ஆகாதார்க்கு உவமமாகும் என ‘முன்னோர் கூறி இருப்பத் தாம் அவற்றைக் கடை மாணாக்கர்க்கு உவமமாக்கல்’ முன்னோர் நூலின் முறையே நன்னூல் பெயரின் வகுத்தனன்’ என்றதற்கு மாறாகும் ஆகலானும், நெய்யரியை அன்னமும் கிளியும் என அவற்றினும் சிறப்புடைத்தாக முன்னோர் கூறி இருப்ப, அம்முறை நோக்காது கோதினைக் கொண்டு தேன் முதலாயவற்றை ஒழுகவிடல் எனத் தாமாக ஒன்று கருதிக் கடை மாணாக்கர்க்கு உவமமாக்கல் கூடாமையானும், நெய்யரியைத் தேன் முதலாய நற்பொருள் கொண்டு கோதினைத் தள்ளற்கே கருவியாகக் கோடல் அன்றி, அவர் கருதியவாறு கோதினைக் கொண்டு நற்பொருள் இழத்தற்குக் கருவியாகக் கோடல் யாண்டும் இன்மையானும் என்பது.