ஏனையவற்றுக்கு இலக்கணம் கூறும் பகுதியும் பாயிரம் எனப் பெயர்பெறல் வேண்டும் ஆகலானும் அந்நன்னூலாரும் நூலின் இயல்பே நுவலின் ஓரிரு பாயிரம் தோற்றி என்றதனால் பொதுப் பாயிரவகையுள் ஒன்றென அவர் கூறிய அந்நூல் இயல்பு அப்பொதுப் பாயிரவகை ஐந்தனையும் சிறப்புப்பாயிரத்தையும் தோற்றல் அமையாமையானும் என்பது. இனிச் சிவஞானமுனிவர் தமது இலக்கணவிளக்கச் சூறாவளியில் நூல் நுதல் பொருளைத் தன்னகத் தடக்கி என்றமையானே நூல் இயல்பு பாயிரத்துள் அடங்காது என்றல் கருத்தன்று என மறுக்க என்றார். ஆண்டு நூல்நுதல் பொருளைத் தன்னகத்து அடக்கி என்றது நூல் இன்னதன்மைத்து என அதன் இலக்கணம் கூறாமல் இந்நூல், தமிழை நுதலிற்று, அறத்தை நுதலிற்று, பொருளை நுதலிற்று, இன்பத்தை நுதலிற்று எனக் கூறி அதனைப் பிறர்க்கு அறிவிப்பதாகலின், ஆக்கியோனால் கூறப்படாத இயல்புடைய பாயிரவகையுள் ஒன்றாகலும், இன்னின்ன இலக்கணத்தது பாட்டு, இன்னின்ன இலக்கணத்தது உரை என்றாற்போல, இன்னின்ன இலக்கணத்தது நூல் என நூல் இயல்பு நூலுள் கூறப்படும் தன்மைத்து ஆகலின் அஃது ஆக்கியோனால் கூறப்படும் இயல்பிற்றாய நூலின் அடங்கிப் பாயிரவகையுள் அடங்காமையும் உணரப்படும் என்பது. இன்னும் அவர் அவயவமாகிய பாயிரத்துள் அவயவியாகிய நூல் அடங்காது எனக் கூறிய இலக்கணவிளக்க நூலாரை நோக்கி, மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் எனவும் ஓத்துப் படலம் என்னும் உறுப்பின் எனவும் ஆசிரியர் கிளந்தெடுத்து ஓதலின், நூல் இயல்பு அந்நூலுக்கு அவயவமாம் என்றும் அதனால் அது பாயிரத்துள் அடங்கும் என்றும் கூறினார். அதுவும் உரையன்று. என்னை? அவர் கூறியவாறு நூல் அவயவியும் நூல் இயல்பு அவயவமும் ஆயினும் அவயவியாகிய உடம்பின்கண் கண் காது முதலாய அக உறுப்பும் உபநயனம் எனும் கண்ணாடி முதலாகிய புறஉறுப்பும் அடங்குமாறுபோல, நூலாகிய அவயவியின்கண் சூத்திரம் ஓத்துப் படலம் நூல் இயல்பு என்னும் அகவுறுப்பும் ஈவோன் தன்மை முதலிய நான்கு வகைப் பாயிரமாகிய புறஉறுப்பும் அடங்கும் எனல் பொருந்துமன்றி, கண்ணாடியாகிய புறஉறுப்பில் கண்ணாகிய அக உறுப்பு அடங்கும் எனல் பொருந்தாமைபோல, அந்நூலது |