உரைக்கும் இயல்புடைமை அம்மூவர்க்கும் ஒரு தலையாகலானும், பொதுப்பாயிரம் ஒருவரைச் சுட்டாமல் ஆசிரியரையும் மாணாக்கரையும் பொது இயல்பானே கூறும் இயல்பினது ஆகலின், உடனிருத்தல் வேண்டாமையானும் அவ்வாறாயின என்பது. இனி உரையாளன் பாயிரம் உரைத்தற்கு உரியனல்லனோ எனின் அவன் நூல் செய்தான் காலத்தோனாயின் உரியனாம்; பிற்காலத்தோன் ஆயின் ஆக்கியோன் பெருமை முதலாயின முற்றும் உணரான் ஆகலின் அவன் உரிமை சிறப்புடைத்து அன்று என்பது. அற்றேல் ஆலவாய் அடிகள் அருளிய நூலுக்கு உரையாளர் பாயிரம் உரைத்தவாறு என்னையோ எனின், அந்நூல் முனைவன் நூலாகலின் அவற்கு ஆசிரியனும் ஒருங்கு கற்றோனும் இன்மையானும் யாவரும் அவன் மாணாக்கராம் இயல்புடையர் ஆகலானும் அந்நூற்குப் புலமையோர் எல்லாரும் உரியராயினர் என்பது. சோழவந்தானூர் அரசஞ்சண்மகன் உரைத்த பொதுப்பாயிர விருத்தி முடிந்தது. |