4. சிறப்புப் பாயிரம் இனிப் பொதுப்பாயிரம் உரைத்தபின்றைச் சிறப்புப்பாயிரம் உரைக்கற்பாற்று. என்னை? பொதுப்பாயிரம் உரைத்தனகொண்டு இவன் ஆசிரியன் என்றும் இவன் மாணாக்கன் என்றும் உணரப்படுவோராகிய இருவருள் ஆசிரியன் மாணாக்கற்கு உரைப்புழிச் சிறப்புப்பாயிரம் உரைத்தே நூல் உரைப்பான் ஆகலின் என்பது. இனி இந்நூற்குச் சிறப்புப்பாயிரமாவது முன்நின்ற வட வேங்கடம் தென்குமரி என்னும் தொடக்கத்துச் சூத்திரமாகலானும், அது நாலின் அகத்து உறுப்பு ஆகாவிடினும் அகத்து உறுப்பாய சூத்திரத்தோடு ஒத்த இலக்கணத்ததாகிப் புறத்து உறுப்பு என நூற்கு முன் நிற்றலானும் நூல் சூத்திரம் உரைத்தாங்கு உரைக்கப்படும். அதுதான் உரைக்கும் இடத்து நான்கு வகையான் உரைக்கற்பாற்று; கருத்து உரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டி அகலம் கூறல் என. அவற்றுள் சிறப்புப் பாயிரத்தின் கருத்து என்னையோ எனின், ஆக்கியோன் பெயர் முதலாயின கூறலால் நூலது பெருமை கூறுதல் நுதலிற்று என்பது. அன்னதாதல் கண்ணழிப்ப விளங்கும். கண்ணழித்தல் என்பது, பதப் பொருள் சொல்லுதல். இனிக் ‘கண்ணழித்தல்’ என்னை எனின்; வடவேங்கடம் தென்குமரி அவ்இடை என்பது = வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரி மலையுமாகிய அவ்இரண்டனையும் எல்லையாக உடைய நிலத்து வழங்குகின்ற என்றவாறு: தமிழ் கூறும் நல்லுலகத்து என்பது = தமிழ்மொழியைக் கூறும் நல்லாசிரியரது என்றவாறு: வழக்கும் செய்யுளும் அ இரு முதலின் என்பது = வழக்கும் செய்யுளும் ஆகிய அவ்இரண்டு இடத்துள்ள என்றவாறு: எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி என்பது = எழுத்தையும் சொல்லையும் பொருளையும் ஆராய்ந்து என்றவாறு: செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு என்பது = செந்தமிழ் இலக்கணம் முற்றும் நிரம்பிய தலைச்சங்கத்து வீற்றிருந்த புலவரொடு பயின்று என்றவாறு: முந்து நூல் கண்டு என்பது = அகத்தியன் முதலாய முந்து நூல்களை ஐயமும் மருட்கையும் அற அவர்பால் கற்றுணர்ந்து என்றவாறு: |