பக்கம் எண் :

184பாயிர விருத்தி

நூலைக் கண்டு, அந்நூலின்கண் அவை முறையின்றிக் கிடத்தலான் அவை முறையொடு பொருந்தக் கருதி, அம்முந்து நூல் இலக்கணங்களையே தொகுத்துக் கூறினான் எனத் திரட்டிக் கூறுதல் என்பது. அங்ஙனம் கூறினும் தொல்காப்பியன் என்னும் படிமையோன் நாடிச் சிவணிய நிலத்தொடு கண்டு எண்ணித் தொகுத்துக்காட்டித் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்தான் என்பதே கருத்தாகக் கொள்க.

இனிப் போக்கறு பனுவல், போக்கறு நிலம், போக்கறு திரு, போக்கறு பாண்டியன், போக்கறு அவை எனவும், மல்குநீர் வரைப்பின் ஐந்திரம், மல்குநீர் வரைப்பிற்றோற்றி நிறுத்த எனவும் கூட்டுக, பாயிரமும் செய்யுளாகலின் அவை இங்ஙனம் இயைய நின்றன. இனி அறங்கரை நாவினான் என்றமையால் போக்கற்றமையும் நான்மறை முற்றிய ஆசான் என்றமையால் பனுவல் ஆராய்ச்சியும் பெறப்படும் ஆகலின் போக்கறு பனுவல் என்னும் அடைகள் ஆசானோடு இயையா ஆயின.

இனிக் கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டிக் கூறிய இம்முப்பகுதியும் காண்டிகை எனப்படும். என்னை?

1“பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற்
 கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும்.’’

என்றார் ஆகலின்.

இனி அகலங் கூறலும் மூவகைப்படும். காண்டிகைப் பொருளை விரித்து உரைத்தலும், காண்டிகைப் பொருளே அன்றி அப்பொருளுக்கு இன்றியமையாது இயைபவை எல்லாம் ஒன்ற உரைத்தலும் மறுதலைக் கடா மாற்றம் உடைத்தாய்த் தன் நூலானும் முடிந்த நூலானும் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றன ஒரு பெருள் ஒற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்ப உரைத்தலும் என.

இனி ஈண்டுக் கூறிய உரைவகை ஆறும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய காண்டிகைவகை இரண்டும் உரைவகை இரண்டும் ஆகிய நான்கனுள் அடங்கும்.

இனிக் காண்டிகை விரி உரைக்கற்பாற்று. தன் பெயர் தொல்காப்பியன் எனவே, ஆக்கியோனது பெயர் பெறப்பட்டது. ஐந்திரம் நிறைந்த பல்புகழ் நிறுத்த படிமையோன் என்றது அவனது பெருமை விளக்கியவாறு.


1தொல், பொருள், 657.