பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்185

முந்துநூல் கண்டு எனவே ஆசிரியர் அகத்தியனார் முதலாய தலைச்சங்கப் புலவர் இயற்றிய அகத்தியம் முதலாய நூல்களே இந்நூலுக்கு முதல்நூலாம் என வழிபெறப்பட்டது. நாடிச் செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு கண்டு என்றது அம்முந்து நூலை ஐயவிபரீதமற முற்றும் உணர்ந்தமைக்குக் காரணம் விளக்கியவாறு.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழெனவே நூல் வழங்கும் இடம், அத்தமிழ் வழங்கு நிலமாம் என எல்லை பெறப்பட்டது.

தொல்காப்பியன் எனத் தோற்றி எனவே நூல் பெயரும் தொல்காப்பியமாம் என்பது பெறப்பட்டது. அரில் தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்து முறை என்றது அந்நூலது பெருமை விளக்கியவாறு.

தொகுத்தோன் எனவே முந்து நூலுள் பரந்து கிடந்த இலக்கணங்களைத் தொகுத்து யாத்தான் என யாப்புப் பெறப்பட்டது.

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் சிவணிய நிலத்தொடு கண்டு தொகுத்து, எழுத்து முறைகாட்டி நிறுத்தான் படிமையோன் எனவே, இந்நூலுள் கூறிய பொருள் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய அவற்றது இலக்கணமாம் என நுதலிய பொருள் பெறப்பட்டது. தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளுமாய் இருமுதலின் என்றது அந்நுதலிய பொருளுக்கு இடம் விளக்கியவாறு.

பாண்டியன் அவையத்து அதங்கோட்டாசாற்குக் காட்டி எனவே பாண்டியனும் அவையோரும் அதங்கோட்டாசானும் கேட்டார் எனக் கேட்போர் பெறப்பட்டது. போக்கறு பனுவல் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் என்றது கோட்டாரது பெருமை விளக்கியவாறு.

முந்துநூல் கண்டு தொகுத்தான் எனவே, இந்நூல் கற்றோரும் முந்துநூல் கற்றோரை ஒப்ப நல்லுலகத்து வழக்கையும் செய்யுளையும் ஐயமும் மருட்கையும் அற உணர்ந்து, அவ்வுணர்வானே அறம் பொருள் இன்பமும் வீடும் எய்துவர் எனத் தானே விளங்கலானும், அரில்தப என்பது நூல் குற்றமே அன்றிக் கற்போரது குற்றமன்று தப எனப் பொருள் உணர்த்தும் ஆகலானும் பயன் பெறப்பட்டது.