செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு கண்டு தொகுத்தான் எனவே இந்நூல் செய்த காலம் தலைச் சங்கத்தாரது காலம் எனக் காலம் பெறப்பட்டது. பாண்டியன் அவை எனவே களம் பெறப்பட்டது. முறைப்பட எண்ணித் தொகுத்தான் எனவே முன் நூலுள் எழுத்தும் சொல்லும் பொருளும் முறையின்றிப் பரந்துகிடந்தன எனவும், அவை சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினோர்க்குப் பயன்படா எனவும், அதனால் அவர்க்குப் பயன்படுமாறு முறைப்பட அவற்றைத் தொகுத்தான் எனவும் போதரலின் காரணம் பெறப்பட்டது. இனி ஒன்ற உரைக்கும் உரை உரைக்கற்பாற்று. வடக்கு எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாய்த் தன்னொடு ஏனைத் திசையையும் உணர்தற்குத் தானே காரணமாகி நிற்கும் மங்கல திசையாலின், இப்பாயிரமும் நூலும் என்றும் நின்று நிலவுதல் வேண்டி முன் கூறப்பட்டது. என்னை? முதற்கண் மங்கலம் கூறல், அன்று ஓர் மரபு ஆகலின். வடக்கு உணர்ந்தே தெற்கு உணரவேண்டும் ஆகலின் அதன்பின்னர்த் தென்திசை கூறப்பட்டது. என்னை; எப்பொருள் கூறினும் காரணத்தை முன்னர்க் கூறலே நூல்முறை ஆகலின். இனித் திசை அறிதற்கு ஞாயிறும் விண்மீன் முதலாயவும் காரணமாகவோ எனின், ஞாயிறு முதலாயின எஞ்ஞான்றும் ஒருதன்மையவாக உதியாமல் காலம் தோறும் வேறுபட உதித்தலான், அதுகொண்டு ஒருவகையால் கிழக்கு அறியப்படினும் காலந்தொறும் மாறுபடலானும், அதுவும் பகல் இரவு என்னும் காலபேதத்தானும், மேகத்தானும் மறைந்தவழி அறியலாகாமையானும், மலை எல்லாம் சிறப்புடைக் காரணமாகாமையான் எஞ்ஞான்றும் ஓரிடத்துத் திரிபின்றி நிற்கும் துருவமீனைத் தன்னிடத்து உடைமையானும், அக்குறிகெண்டு எக்காலத்தும் மாறின்றி வடக்கு அறியப்படலானும் அதுவே காரணமாதல் உணரப்படும் என்பது. இதுவன்றி இக்காலத்து உளதாகிய திசை அறி கருவி, எஞ்ஞான்றும் வடக்கையே உணர்த்தலும் அறிக. இனி ஆசிரியர் இந்நூல் செய்த காலத்து வேங்கடமலையின் வடக்கிருந்து இமயமலைவரை ஆரியமும், வேங்கடமலையின் தெற்கிருந்து குமரிமலைவரை தமிழும் பரவியிருந்தபடியானும் அக்காலத்து வடதிசைக்கண் கங்கையாறும் இமயமலையும்போலத் |