செயற்கைத்து ஆகலின், அதன்கண் அடங்காது செய்யுள் எனப் பெயர் பெற்றது. செய்யுளுக்குக் காரணம் ஆகலின் வழக்கு முன்கூறப்பட்டது இனி, 1“வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான.’’ |
என்றதனான் வழக்கும் செய்யுளும் எனவே உயர்ந்தோரது வழக்கும் செய்யுளும் என்பது போதரலின் நல்லுலகத்து எனல் வேண்டா எனின், ஏனையோர் வழக்கும் செய்யுளும் கொள்ளப்படா என அறிவித்தற்பொருட்டு அங்ஙனம் கூறினார். என்னை? 2“கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார்.’’ |
என்றார் ஆகலின் பல்காலும் மாறுபடும் இயல்புடைய அவர்வாய்ப் படலின், அவர் வழக்கும் செய்யுளும் நல்லாசிரியரது வழக்கையும் செய்யுளையும் ஒரோவழி ஒத்திருப்பினும் கொள்ளப்படாமையான் என்பது. வழக்கும் செய்யுளுமாகிய அவ்இரண்டையும் முதல் என்றார்; என்னை? அறிவுடைப்பொருளாகிய உயிர், அறிவுடைப் பொருளும் அறிவில் பொருளுமாகிய காட்சிப் பொருளையும் கருத்துப் பொருளையும், மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறி வாயிலால் கண்டறியாமல், அவ்வைந்தனுள் செவியைத் துணையாகக் கொண்டு மனம் என்னும் பொறியால் கேட்டறிதற்கு அவையே இடமாக நிற்றலின். இடத்து நிகழ்பொருளை இடம் உணர்ந்தன்றி அறியலாகாமையின், இடன் காரணமாதல்பற்றி, அவ்இடன் முதல் எனப்பட்டது. என்னை? 3“முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப வியல்புணர்ந் தோரே.’’ |
என்றார் ஆகலின். முதலை உணர்ந்தன்றி, அதன் சினை இத்துணைய என அறியலா காமையான், வழக்கும் செய்யுளுமாகிய முதல் கூறப்பட்டபின் அவற்றின் சினையாகிய எழுத்தும் சொல்லும் கூறப்பட்டன.
1தொல்பொருள். 648 2குறள் 404 3தொல், பொருள்.4 |