அவற்றுள்ளும் சொல்லுக்கு எழுத்து காரணமாதலின், அது முன் கூறப்பட்டது. முதலும் சினையுமாகிய இடம் காரணமாக அறியப்படுதலின் அவற்றின் பின்னர்ப் பொருள் கூறப்பட்டது. இனி வைசேடிகர் கூறிய பொருள் பண்பு தொழில் சாதிவிசேடம் இயைபு என்னும் அறுவகைப் பொருளையும் அவற்றது இன்மையையும் முதல் சினை அடை என மூன்றாகவும், பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என ஆறாகவும் இவ்ஆசிரியன் பகுக்கும். அதனை அடை சினை முதல் எனவும், முதலில் கூறும் சினை எனவும், சினையில் கூறும் முதல் எனவும், பண்புகொள் பெயர் எனவும், பிறந்த வழிக் கூறல் எனவும் பிறவும் பின்னர்க் கூறுமாற்றான் அறிக. இனி வழக்கும் செய்யுளும் இடமாயவாறு கூறுதும். ஆசிரியர், 1“வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா வின்னதற் கிதுபய னாக வென்னு மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ யாயெட் டென்ப தொழின்முத னிலையே.’’ |
என்றார் ஆகலின், ஒருபொருள் பிறிது ஒன்றனை ஐம்பொறி வாயிலால் காட்சியின் அறியுமிடத்து அத்தொழிற்குக் காரணமாகிய வினையும், அப்பொருளாகிய அத்தொழிலைச் செய்வதும், அப்பொருளான் அறியப்படும் பிறிதொரு பொருளாகிய செயப்படு பொருளும், அச்செயப்படுபொருள் நிலம் நீர் முதலாயவற்றுள் யாதானும் ஓர் இடன் பற்றியே நிற்கும் ஆகலின் அவ்இடனும், அவ்இடத்து நிகழ் பொருளை அறிதல் இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலத்துள் ஒன்றுபற்றி ஆகலின் அக்காலமும், அறிதற் கருவி ஐம்பொறியும் மனமும் அன்றி வேறொன்று இன்மையான் அக்கருவியும் தனக்காயினும் பிறர்க்காயினும் யாதானும் ஒரு பயனின்றி ஒரு தொழிலும் உளதாகாது ஆகலின் இன்னதற்கு இது பயன் என்பனவும் எனத் தொழில் முதனிலை எட்டும் பெறப்பட்டாற்போல, ஐம்பொறி வாயிலால் காட்சியின் அறியாது கேள்வி வாயிலான் வழக்கும் செய்யுளும் பற்றி அப்பொருளை மனக் கருவியான் அறியும் தொழிற்கும் அவ்எட்டு முதனிலையும் வேண்டும் ஆகலானும், அத்தொழிற்கு நிலம் ஒழிந்த ஏனைய ஏழும்
1தொல், சொல்லதிகாரம் 112. |