முன்கூறியது கொண்டு விளங்குதலான், ஐம்பொறிவாயிலான் அறியும் செயப்படுபொருளின் இடன் எனக் காட்சியில் தோன்றும் நிலம் நீர் முதலாயவை பற்றி அறியாமல், மனக் கருவியான் அறிதற் பாலவாய அச்செயப்படு பொருளை வழக்கும் செய்யுளும் பற்றி அறிதலானும் அவையே இடமாகல் அறியப்படும் என்பது. இனி வழக்கும் செய்யுளும் இடமாகா; கருவியே எனின், ஐம்பொறியும் மனமுமாகிய அறிதற் கருவி ஆறனுள் அவை ஒன்றாகாமையானும், இடமின்றி ஒருதொழிலும் உளதாகாமையான் அத்தொழிற்கு வழக்கும் செய்யுளும் கருவியாக முடியின் இடன் எனப்படுவது பிறிதொன்றும் காணப்படாமையானும் அது பொருந்தாது. கருவி என்றதனைப் பல்வகைக் காரணங்கட்கும் பொதுப்பெயராகக் கொள்ளின் வினை முதலாய எட்டும் தொழில் காரணமாகலின் அக்கருத்தானே அவற்றைக் கருவி எனக் கோடலும் பொருந்தும் என்பது. இனி வழக்கும் செய்யுளுமாகிய நிலன் ஒலி வடிவாயின் செவியானும் வரி வடிவாயின் கண்ணானும் உணரப்படும். வரி வடிவு கண்ணானன்றி மெய் அறிவானும் உணரப்படும் தன்மை உடைத்து. அது குருடாயினார்க்கு அவர் கைப்பற்றிப் பிறர் எழுதிக் காட்டின் அதனை அவர் உணருமாற்றான் அறிக. இனி எழுத்து எனப்படுவது யாதோ எனின், கண் முதலாய பிறவற்றுக்குப் புலனாகாது செவிப்புலனே யாகும் ஒலி வடிவும், செவி முதலாய பிறவற்றுக்குப் புலனாகாது கண்ணுக்கும் மெய்க்கும் புலனாகும் வரி வடிவும் உடைத்தாய், தனித்து நின்றாயினும் சார்ந்து நின்றாயினும் தன்னை உணர்த்தலுடன், பொருள் உணர்த்தும் சொல்லாகலும் அச்சொல்லுக்கு உறுப்பாகலுமாகிய இரு தன்மையும் ஒருங்கு பெற்றாயினும், அன்றி உறுப்பாக இயைதல் தன்மை ஒன்றே பெற்றாயினும் நிற்கும் ஒலியாம். தன்னையே உணர்த்தும் கடலொலி இடியொலி முதலாயவும் தன்னொடு மணவினையும் மகிழ்வும் முதலாய பிறபொருளையும் உணர்த்தும் சங்கொலி நகையொலி முதலாயவும், சொல்லாதல் தன்மையொடு கூடியாயினும் தனித்தாயினும் உறுப்பாதல் தன்மை எய்தாமையின் எழுத்து எனப்படா ஆயின. இனி ஙா ஙி முதலாய பதினோரு உயிர்மெய் எழுத்தும் தம்மை உணர்த்தலன்றிப் பிறிதொரு பொருள் உணர்த்தும் சொல்லுக்கு |