உறுப்ப ஆகாமையின் அவையும் எழுத்து எனப் படாவோ எனின், அவை ஓர் எழுத்தாகாமல் ஈரெழுத்தாகவே நிற்றலான் அங்ஙகர மெய்யும் அதன்கண் ஏறிய உயிரும் சொல்லுக்கு உறுப்பாதல் தன்மை உடைமையானும் எழுத்துப் பல ஒருங்கு கூடின் அவை ஏற்றபெற்றி சொற்கு உறுப்பாதல் அன்றி எல்லாம் உறுப்பாக வேண்டுமெனல் இலக்கணம் அன்மையானும், ஆசிரியர் அகரம் முதல் ஆய்தம் ஈறாய முப்பத்து மூன்றே எழுத்தெனக் கூறினமையான், அவற்றின் கூட்டமே உயிர் ஆவதன்றி அம்முப்பத்து மூன்றின் வேறாய பிறிதோர் எழுத்து எனல் பொருந்தாமையானும், ட ற ல ள என்னும் புள்ளியென இயைந்து நிற்பினும் நான்கெழுத்து எனப்படுதலன்றி ஓரேழுத்து எனவும் அவை சேர்ந்து மொழிக்கு உறுப்பாதல் வேண்டும் எனவும் கொள்ளப்படாமைபோல், உயிர்மெய்யெழுத்தும் ஈரெழுத்து எனக் கொள்ளப்படுதல் அன்றி ஓர் எழுத்து எனவும் மொழிக்கு உறுப்பாதல் வேண்டும் எனவும் கொள்ளப்படா என்பது. இனி ஒர் எழுத்து ஒருமொழி என்பது ஈரெழுத்தாய ‘கா’ முதலாய உயிர்மெய் எழுத்தையும் உணர்த்துமாறு என்னை எனின், செய்யுளில் உயிரெழுத்து எண்ணுப்பெற மெய்யெழுத்து எண்ணுப் பெறாமைபற்றி ஓர் எழுத்து ஒருமொழி எனப்படினும் இரண்டு ஒலியின் கூட்டம் ஆதலின் ஒலிபற்றி ஈரெழுத்து எனவே கொள்ளப்படும் என்பது. ஈண்டு ஒலி என்றது செவிப்புலனால் கவரப்படும் பொருளை. என்னை? காற்றுக் கண் புலனாகா உருவினதாயினும் மெய்ப்புலனாகி உற்று இன்பதுன்பம் ஆக்கலானும், இயங்குதலானும், மரம் முதலாயவற்றை இயக்கலானும், இக்காற்று வலிது இக்காற்று மெலிது எனக் கூறப்படலானும், பொருளென்ற கோடும்; அதுபோல ஒலியும் உந்தி முதலாகத் தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து கண்புலனாம் தன்மை இன்றிச் செவிக்கண் சென்று உறும் ஊறு உடைமையானும், இன்ப துன்பம் ஆக்கலானும், வன்மை மென்மை குறுமை நெடுமை கோடலானும், விசும்பின்கண் இயங்குவதோர் தன்மை உடைமையானும், பேரொலிக்கண் மண் அதிர்தல் காணப்படலானும், காற்றால் காரியப்படும் தன்மை உடைத்தென அறியப்படல் இது என்பது. இனி அவ்வொலியது வரி வடிவாவது, கண்புலனாகா உரு உடைய ஒலியைச் செவிப்புலனாம் காலத்தன்றி, ஏனைக் காலத்தும் |