பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்193

உணருமாறு வட்டம் சதுரம் முதலாய வடிவாக எழுதப்படுவது. அவ்வரி வடிவு ஒருவன் பிறனொருவனைக் கண்டு அவன் வடிவை எழுதி வைப்பின் அவ்வடிவு அவனைக் காணாவிடத்தும் உணர்த்துமாறுபோல ஒலி வடிவை உணர்த்தும் என்பது.

இனி ஆசிரியர் ஆண்டு மாறுபடாமையான், ஒலி வடிவிற்கே இலக்கணம் கூறி, காலந்தோறும் மாறுபடும் இயல்புடைமையான் அவ்வக்காலத்து வழக்குப்போல எழுதிக்கொள்க என்னும் கருத்தானே, வரிவடிவை இவ்வாறு எழுதுக என்று கூறாது, நூல் விதியான் அன்றி அவ்வக்காலத்து வழக்கான் எழுதப்படுமாயினும் அவ்வரி வடிவுள் சிலவற்றுக்கு ஒலி வடிவின் தன்மைபற்றி எக்காலத்தும் மாறுபாடின்றி வேண்டற்பாலவாய சில அடையாளமே கூறினார். இவ்வாற்றான் இருவடிவும் கொண்டாராயிற்று.

இனி அவ்அடையாளம் ஒலி பற்றிய குறியாகலின், காலத்தால் மாறுபடும். இயல்புடைத்தாய வரி வடிவு மாறினும் மாறாமையும் ஆசிரியர் வரி வடிவு கூறாமையும் நூல் மரபுள் கூறுதும்.

இனித் தன்னை உணர்த்திப் பொருள் உணர்த்தும் சொல்லாகவும் சொற்கு உறுப்பாகவும் நிற்கும் ஒலியாவது, ஆ ஈ முதலாயின இன்னதன்மைய ஓசையென உணர்த்தலுடன், ஒரு விலங்கும் ஒரு பறவையும் எனப் பொருள் உணர்த்தும் சொல்லாகியும், ஆர் ஈர் எனச் சொற்கு உறுப்பாகியும் நின்றாற் போல்வது.

இனிச் சொற்கு இயையும் ஒலியாவது, தன்னை உணர்த்திப் பொருள் உணர்த்தும் சொல்லுக்கு உறுப்பாக மாத்திரம் இயையும் ஒலியாம். அஃது ஒகர உயிர் சொற்கு உறுப்பாதல் தன்மை ஒன்றே பெற்று, ஒற்றர் ஒன்று ஒண்மை என நின்றாற் போல்வது.

இனிச் சொல்லாவது, எழுத்துத் தனித்தாயினும் கூடிநின்றாயினும் தம்மை உணர்த்தி, இருதிணைப் பொருள் தன்மையும் ஒருவன் உணர்தற்கு நிலமாகி நிற்கும் ஒலியாம். ஆ ஈ ஊ முதலாயின ஓர் எழுத்தாலாய சொற்கள். கண் கடல் கழுத்து கறங்கல் முதலாயின பல எழுத்தாலாய சொற்கள்.

இனி ஆ முதலாயின தம்மை உணர்த்து நிலைமைக்கண் எழுத்தாகவும் பெற்றம் முதலாய பொருளை உணர்த்து நிலைமைக்கண்