இன்றியமையாதிருத்தல் வேண்டுமாதலின், ஆசிரியன் அவற்றை உடையனாதல். ‘ஈதலியற்கை’ என்பது ஆசிரியன் உரைக்கும் முறைமை என்றவாறு. அஃதாவது, பசியான் இரப்போர்க்கு அவர் பசி அளவறிந்து, முகமலர்ந்து, இன்சொல் கூறி, உணவளித்தாங்கு மாணாக்கர்க்கு அவன் அளிக்கும் முறைமை. ‘கொள்வோன் தன்மை’ என்பது மாணாக்கனது தன்மை என்றவாறு. அஃதாவது, பசித்து ஊண் வேட்டு இரப்போன் அதனை உடையார்மாட்டு இரத்தலும் அவர்க்குக் கருணைவர நடத்தலும் உடையனாயினாற்போல அவன் கற்றார்மாட்டு இரத்தலும் பிற்றைநிலை முனியாமையும் உடையனாதல். ‘கோடல் மரபு’ என்பது மாணாக்கன் கேட்கும் முறைமை என்றவாறு. அஃதாவது, பசித்து ஊண்வேட்டு இரந்தாற்கு அதனை அளிப்பின் அவன் அதனை ஆர்வத்தொடு ஏற்றுச் சிதறாமல் அருந்திப் பசி தீர்ந்தாற்போல ஆசிரியன் அளித்த பொருளை அவன் கொள்ளும் முறைமை. இனிச் சிறப்புப் பாயிரம் எட்டு வகைப்படும்; ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூல் பெயரும் யாப்பும் நுதலிய பொருளும் கேட்போரும் பயனும் என. என்னை? 1“ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.’’ |
என்றாராகலின். இனி ஒருசாரார் காலமும் களனும் காரணமும் கூட்டிப் பதினொன்றாம் என்பாரும் உளர். என்னை? 2 “காலங் களனே காரண மென்றிம் மூவகை யேற்றி மொழிநரு முளரே’’ |
என்றாராகலின்.
1 இறையனார் களவியலுரை மேற்கோள் 2 இறையனார் களவியலுரை மேற்கோள். |