பக்கம் எண் :

22பாயிர விருத்தி

இனி ‘ஆக்கியோன் பெயர்’ என்பது நூல் செய்த ஆசிரியன் பெயர் என்றவாறு.

‘வழி’ என்பது இந்நூல் இன்ன நூலின் வழித்தாகச் செய்யப்பட்டது என்பது.

‘எல்லை’ என்பது இந்நூல் இன்ன எல்லையுள் நடக்கும் என்பது.

‘நூற்பெயர்’ என்பது நூலது பெயர் என்றவாறு. அது பெயர் பெறுமிடத்துப் பல விகற்பத்தால் பெயர் பெறும். அவ்விகற்பங்கள் செய்தான், செய்வித்தான், இடுகுறி, அளவு, சிறப்பு முதலாயின. செய்தானால் பெயர் பெற்றன; அகத்தியம், தொல்காப்பியம் என இவை, செய்வித்தானால் பெயர் பெற்றன: சாதவாகனம், இளந்திரையம் என இவை. இடுகுறியால் பெயர் பெற்றன. நிகண்டு கலைக்கோட்டுத் தண்டு என இவை. அளவினால் பெயர் பெற்றது; பன்னிருபடலம் சிறப்பினால் பெயர் பெற்றது; களவியல். என்னை?

1“முற்ப டப்புண ராதசொல் லின்மையிற்
 கற்பெனப் படுவது களவின் வழித்தே.’’

எனக் கற்பினும் களவினைச் சிறப்புடைத்து என்று அவ்வாசிரியன் வேண்டுமாதலின்.

இனி ‘யாப்பு’ என்பது நூல் யாப்பு என்றவாறு. அது யாக்குமிடத்து நான்குவகையான் யாக்கப்படும்; தொகுத்தும் விரித்தும் தொகை விரிசெய்தும் மொழிபெயர்த்தும் என. என்னை?

2“தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்த்
   ததர்ப்பட யாத்தலோ 3டனைமர பினவே’’

என்றாராகலின்.

இனி ‘நுதலிய பொருள்’ என்பது நூல் நுதலிய பொருளைச் சொல்லுதல் என்றவாறு.


1. இறையனார் களவியல் 15-வது சூத்திரம்.
2. தொல்காப்பியம் பொருளதிகாரம் 659-வது சூத்திரம்.
3.‘அனைவகைப் படுமே’ என்பதூஉம் பாடம். இறையனாரகப் பொருளுரை1-வது சூத்திரம் 4-வது பக்கம்.