பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்23

‘கேட்போர்’ என்பது நூலைக் கேட்டு அதன்கண் குற்றமின்மை ஆராய்வோர் என்றவாறு.

‘பயன்’ என்பது இது கற்க, இன்ன பயக்கும் என்பது.

‘காலம்’ என்பது நூல் இன்ன காலத்துச் செய்யப்பட்டது என்பது.

‘களம்’ என்பது இன்னார் அவைக்களத்து இந்நூல் அரங்கேற்றப்பட்டது என்பது.

‘காரணம்’ என்பது இந்நூல் இன்ன காரணத்தால் செய்யப்பட்டது என்பது.

இனிப் பொதுப்பாயிரவகை நான்கனுள் ‘ஈவோன் தன்மை’ உரைக்கற்பாற்று.

அது பயன்படலும் படாமையும் பற்றிக் கற்கப் புகுதற்குத் தகுதியுடைத்து ஆகுதலானும் ஆகாமையானும் கற்கப்படு தன்மையும் படாத்தன்மையும் என இரு வகைப்படும்.

அவற்றுள், கற்கப்படுதன்மையுடையான் ஆசிரியன் எனப் படுவான்; அத்தன்மை இல்லாதான் ஆசிரியனாகாதான் எனப்படுவான்.

அவருள் கற்கப்படுவோன் நான்கு உவமத்தான் உணரப்படுவான். என்னை?

1“மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்ன
  ருலைவி லுணர்வுடை யோர்.’’

என்றார் ஆகலின்.

கற்கப்படாதோனும் நான்கு உவமத்தான் உணரப்படுவான். என்னை?

2“கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
  குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.’’

என்றார் ஆகலின்.


1. இளம்பூரணருரை மேற்கோள்2. இளம்பூரணருரை மேற்கோள்