பக்கம் எண் :

24பாயிர விருத்தி

இனிக் குணம், ஒழுக்க, நெறி, பயன், நாற்றம், உருவம் முதலாய சொற்கள் அடை இல்வழி நன்மைக்கூற்றை வரைந்து ஏனைக் கூற்றை விலக்கி நற்குணம் நல்லொழுக்கம் முதலாயவற்றை உணர்த்தியாங்கு, மலையும் நிலனும் பூவும் ஈண்டு அடையின்றி நிற்றலின், நன்மலையையும் நன்னிலத்தையும் நற்பூவையும் உணர்த்தின. அவற்றுள் நன்னிலம் என்பது நெற்பயிர் முதலாயின செய்யும் நன்செய்யை.

துலாக்கோல் என்பது நூறு பலத்து அளவு தன் நாவின்கண் உள்ள வரையான் உணர்த்தும் சிறப்புடைய நிறுத்தற் கருவியை. துலாம் என்பது நூறு பலம் அஃது ஆகுபெயரான் அதனை உணர்த்தும் வரையினை உணர்த்திற்று.

இனித் தராசுகோல் எனப் பொருள்கொண்டால் குற்றம் என்னோ எனின், அது பொருந்தாது. என்னை? அது சிறிதாயின் துலாம் என்னும் நிறையை ஒருமுறையில் நிறுத்தல் செய்யாமையும், பெரிதாயின் துலாத்தின் மிக்க பாரத்தையும் நிறுத்தலும் உடைமையின் ஆகுபெயராகித் துலாக்கோல் எனப்படாமையானும் நிறுத்தற் கருவியாகத் தான் இருந்து வைத்தும் படிக்கல் முதலிய பிறகருவி வேண்டும் சிறப்பின்மையானும் என்பது.

இனிக் கழற்பெய் குடம் என்பது விளையாட்டுச் சிறார் கழற் பெய்துவைக்கும் கலசத்தை உணர்த்திற்று; வழக்கு மிகுதிபற்றி.

இனி மடற்பனை என்பது ஆண் பனையை உணர்த்திற்று. என்னை?

1“இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
 வழக்கா றல்ல செய்யு ளாறே.’’

என்றார் ஆகலின், மடல் இனம் சுட்டலான் என்பது.

இனி மடல் இனம் சுட்டுமாறு என்னை எனின், மடல் என வேறு காட்டாமல் அம்மடலின்கண் காய்த்தலையுடைய ஏனைப் பெண் பனையாய இனத்தைச் சுட்டி அதனினின்று விலக்கிக் காய்த்தல் இன்மையின் வேறாகக் காணப்படும் மடலுடைய


1 தொல்காப்பியம் சொல்லதிகாரம். 18.