ஆண்பனையை அவ்அடை வரைந்து உணர்த்தல் வழக்காறு ஆதலின் என்பது. இனிக் காய்த்தல் பனை வேறுகாட்டாவிடினும், மடல் உண்மையின் அவ்அடை பெறாமை என்னை எனின், கை என்பது கொடுத்தல் சிறப்பில்லாக் களிற்றை விசேடித்துக் ‘கைக்களிறு’ என்று வருதல் அல்லது கொடுத்தல் இயல்புள்ள மக்களை விசேடித்து வாராமைபோல, மடலும் காய்த்தல் சிறப்பில்லாத ஆண்பனையை விசேடித்தல் அல்லது அச்சிறப்புள்ள பெண்பனையை விசேடித்து வாராது என்பது. இனி இக்கருத்தறியாமல் நன்னூலார் முதலாயினார் உடல் முழுதும் மடல்விரிந்த காய்த்தலையுடைய பனை எனப் பொருள் கொண்டார். அது பொருந்தாது. என்னை? மடல் என்பது அக இதழும் அதனை மூடிப் பின்னர் விரிக்கும் புறஇதழுமாகிய பாளைக்குப் பெயராதலன்றி, ஓலையைத் தன்னகத்துக் கொண்டிருக்கும் மட்டைக்குப் பெயராகாமையானும் ஆகுமெனக் கூறுவார் உளராயினும் அஃது உடல் முழுதும் விரிந்த மடலெனப் பொருள் படாமையனும் என்பது. இனிப் 1பெரும்பாணாற்றுப்படையுள், ‘யாற்றல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்’ என அது மட்டையை உணர்த்திற்றால் எனின், ஆண்டும் பாளையே உணர்த்தல் அவ்வுரையினை ஆராயில் காணப்படும் என்பது. இனி ஆகுபெயரால் மடல் மட்டையை உணர்த்திற்று எனக் கொள்ளுதும் எனின், மட்டைஇன்றிக் காய்க்கும் பனை என்றிருப்பின் அதனை இனம் சுட்டல் கூடுமாதலானும் அவ்வாறு காய்க்கும் பனை யாண்டும் இன்மையின் அவ்அடை இனம்சுட்டாமையானும் அதுவும் பொருந்தாது என்பது. இனி முடத்தெங்கு என்பது ஏனைத் தெங்கினது நெருக்கத்தால் ஞாயிற்றின் ஒளிபடாமல் முடமாய கூந்தல் தாழையை உணர்த்திற்று. கூந்தல் என்றது ஓலையினை. தாழை என்றது தெங்கினை. காய்த்தற்குக் காரணமாகிய பாளை இன்றி ஓலையே
1 பெரும்பாணாற்றுப்படை 86 வது அடி. |