உடைமை இனப்பெயர்த்தாயிற்று. அதனைக் கூந்தாழை என இக்காலத்தார் வழங்குப. அது மரூஉ வழக்கு, கோந்தாழை என வழங்கலும் உண்டு. இனிக் குருடு செவிடு ஊமு என இவை, காணல் கேட்டல் சொல்லல் என்னும் தம் தன்மையினைக் கொள்கை இல்லாத கண்ணும் காதும் நாவும் என அவற்றது குறையினை உணர்த்தியாங்கு, முடம் என்பதூஉம் எண்வகை உடல் குறையுள் ஒன்று ஆகலின் கொடுத்தற்கும் ஏற்றற்கும் எதுவாகிய நீட்டல் முடக்கல் என்னும் தன்தன்மையினைக் கொள்ளாத கையினது குறையையும் பிற உறுப்பினைத் தாங்கிநிற்றல் என்னும் தன் தன்மையினைக் கொள்ளாத காலது குறையையும் உணர்த்தும் ஆதலின் ஈண்டுக் காய் கொடுத்தற்கு ஏதுவாகிய கையினை ஒத்த பாளை ஈனாக் குறையை உணர்த்திற்று. இக்கருத்தறியாது நன்னூலார் முதலாயினார் அதனை வேலிக்கு அப்புறம் வளைந்த தெங்கு எனக் கொண்டார். அது பொருந்தாது. என்னை? முடம் வினைச்சொல் ஆகாமையானும், வேலிக்கு அப்புறமென ஏதுவின்றி, அச்சொல்லை வருவித்தல் கூடாமையானும், வளைந்த முதுகு போல்வது எனக் கொள்ளுதும் எனின், அது ‘கவைமுலை யிரும்பிடிக் கவுன்மருப் பேய்க்குங், குழைமுதிர் வாழைக் 1கூனி வெண்பழம்’ என்றாற்போலக் கூன் எனப்படலன்றி, முடம் எனப்படாமையானும் என்பது. இனிப் பதிற்றுப்பத்தின்கண், 2‘முடந்தை நெல்லின் விளை வயற் பரந்த தடந்தா ணாரை’ எனவும், 3‘தடந்தா ணாரை படிந்திரை கவரு, முடந்தை நெல்லின் கழை’ எனவும், அச்சொல் வளைவு குறித்து வந்தால் எனின், ஆண்டு நெல்லின்கழை நிலத்தின்கண் நின்றதாயின் அதன்மேல் தங்கி இரை கவரல் கூடாமையின், நாரை நிலன்படிந்து இரை கவருமாறு நிற்றலின்றி, நிலத்து வீழ்ந்த அக்கழையினை உணர்த்தலின், கதிரினைத்தாங்கி நிற்கும் இயல்பில்லாமல் முடம்பட்ட வேர் எனப்படும் காலினது தன்மைபற்றி வந்ததன்றி வளைவாகிய வினைபற்றி வந்ததன்று என்பது.
1. | பெரும்பாணாற்றுப்படை 359- வது அடி | 2. | பதிற்றுப்பத்து 29- வது பாட்டு | 3. | பதிற்றுப்பத்து 32- வது பாட்டு. | |
|