பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்27

இனிப் பிற செய்யுளின்கண் 1‘முடமதி மிலைச்சினான்’ என வந்தமையின் ஆண்டு வளைவு குறித்ததால் எனின், ஆண்டும் வளர்தலாகிய தன் தன்மையைக் கொள்ளாமல் முடம்பட்டு இறைவன் முடிமருங்கு என்றும் ஒருபடித்தாகக் கிடக்கும் பிறையினை உணர்த்தலின் ஏனைக் கலை வளர்ச்சியினடியாக நின்ற அப்பிறையது வளர்ச்சியின்மை குறித்ததன்றி வளைவு குறித்திற்றிலது என்பது.

இனிக் குண்டிகைப் பருத்தி என்பது நீர்க் கரகத்துள் பெய்து வைத்த பருத்திக் காயினை உணர்த்திற்று. என்னை? விளையாடற் பொருட்டுக் கழற்காயினையும் புன்னை கமுகு முதலாயவற்றின் காயினையும் அவைபோல்வன பிறவற்றையும் கொண்டாற் போலப் பருத்திக் காயினையும் சிறார்கோடல் வழக்கு ஆதலானும், அக்காய் வெளியுறக் கிடப்பின் காற்றால் உலர்ந்தாயினும் வெயிலால் காய்ந்தாயினும் வெடித்தலின், விளையாடற்கு ஆகாமையும் நீருள் கிடப்பின் சின்னாட்குப் பயன்படலும் உடைமையின் நீர்வறிதறியாக் கரகமென்னும் குண்டிகையுள் அவர் பெய்துவைத்தல் வழக்காதலானும் என்பது.

இதனை உணராது நன்னூலார் முதலாயினார் குண்டிகைப் பருத்தியைப் பருத்திக் குண்டிகை என மாற்றிப் பஞ்சடைத்ததாகிய மிகச்சிறிய வாயினை உடைய நீர்வறிதாய குடுக்கை எனப் பொருள்கொண்டார். அது பொருந்தாது என்னை? குண்டிகை என்பது யாண்டும் வாய் அகன்ற நீர்க் கரகத்தையன்றி நீர்வறிதாய பிறிதொன்றனை உணர்த்தாமையானும், குண்டிகைப் பஞ்சு எனினும் சூத்திரம் அமைதலின் அங்ஙனம் கூறாமையே அப்பருத்தி பஞ்சினை உணர்த்தாது என்று அறிவித்தலானும், வழக்கின்கண் குடுக்கையுள் அடைத்தற்பாலதாய இலவம் பஞ்சினை விலக்கிப் பருத்திப் பஞ்சு எனக் கூறலால் போந்தபயன் பிறிதுஒன்று இன்மையானும் என்பது

இனித் ‘தந்வீ சாருபயோதரா சுவதநா சியாமா மநோகாரணி நீதா நிட்கருணேந சேநசிதகோ’ எனத்தொடங்கிப் ‘பிராணப் பிரியா குண்டிகா’ என முடிந்த ஆரிய சுலோகத்துள் ‘சிறுபெண்ணும் அழகிய முலையாளும் நன்முகத்தாளும் யௌவனத்தாளும் மனோகரம் உடையாளுமாகிய பிராணப் பிரியையைக் கருணை


1“முடமதி மிலைந்தா னுங்கண் முகமதி யிடத்த தென்றான்’’ திருவிளையாடல்- வளையல் விற்ற படலம் 6 வது பாட்டு.