பக்கம் எண் :

50பாயிர விருத்தி

1“அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
 ரென்பு முரியர் பிறர்க்கு.’’

எனவும் கூறினார் ஆகலின் 2இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போராகிய வேளாளர் அப்பெற்றியவாகிய ஈகை உடையார்.

அவர் மலையின் எதிரொலிபோல எழுதாக் கேள்வியாகிய வேதம் ஓதலின்றி எழுதப்படுவனவாகிய தருக்கமும் கணிதமும் பிறவும் ஓதுதல் உடையார்.

இனித்தும்பியின் இசையைச் சேணிடைக் கேட்ட மாத்திரையான் இருக்கைவிட்டு எழுந்து பணியாது, வந்தபின்னரே பணிதலின் பூ வழிபாடு இன்று. துலாக்கோல் தன்னில் பெரியாராய கொள்வோரைக் கண்ட மாத்திரையானே இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின முன்னர்ச் செய்து பின்னர் அவர் வேட்ட பொருளை அவர் வேட்டவாறே நிறுத்து அளித்தலின் வழிபாடு உடைத்து.

இனி வேளாளர்,

3“இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை
 விடுப்ப வொழிதலோ டின்ன- குடிப்பிறந்தார்
 குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ
 டொன்றா வுணரற்பாற் றன்று.’’

என்றார் ஆகலின் அவ்வாறு வழிபடல் உடையார்.

ஏனைய நிரை ஓம்பலும் வாணிகமும் உழவும் மேற்கூறப்பட்டன.

அவை வணிகர்க்கு ஓதல் முதலாகவும் வேளாளர்க்கு ஈகை முதலாகவும் உரைத்த எண்ணின் முறைபற்றி வேறுபாடு உடைமையின் அவ்இருவர்க்கும் சிறப்பாயின.

இனி அக்குடம் எதிரொலியும் ஈகையும் இன்று. அத்தெங்கும் முடத்தால் எஞ்ஞான்றும் கூம்பி நிற்றல் கைகூப்பி வழிபாடு செய்வான் இயல்பு குறிக்கும். அப்பருத்தி இருக்கை எழல் முதலாயின செய்யாமையின் வழிபாடு இன்று, ஏனைய மேல் கூறப்பட்டன.


1திருக்குறள் 72.

2சிலப்பதிகாரம் நாடுகாண் காதை

3நாலடி 143