பக்கம் எண் :

52பாயிர விருத்தி

இனித் துறவு நிலையுள் தவத்தின் இயல்பு என்னை எனின், ஊண் நசை இன்மையும் நீர்நசை இன்மையும் வெப்பம்பொறுத்தலும் தட்பம் பொறுத்தலும் இடம் வரையறுத்தலும் ஆசனம் வரையறுத்தலும் இடையிட்டு மொழிதலும் வாய்வாளாமையும் என 1நாலிரு வழக்கில் தாபதப் பக்கம் என்பது.

அவற்றுள் ஊணும் நீரும் நசை இன்மை என்பன, உணவினும் நீரினும் சென்ற மனத்தைத் தடுத்தல், வெப்பமும் தட்பமும் பொறுத்தல் என்பன, ஐந்தீ நாப்பணும் நீர்நிலையினும் நிற்றல். இடமும் ஆசனமும் வரையறுத்தல் என்பன, கடலும் மலையும் காடு முதலாயவற்றுள் ஓரிடத்துள் தாமரையும் ஆம்பலும் ஆமையும் முதலாயவற்றுள் ஓராசனத்து இருத்தல். இடையிட்டு மொழிதலும் வாய் வாளாமையும் என்பன, உண்டல் முதலாயின செய்காலை உரையாடாமையும் துறந்தக்கால்தொட்டு வாய் வாளாமையுமாம்.

அவற்றுள் மலை, நிலன்போல எரு இடலும் நீர்ப் பாய்ச்சும் வெஃகாமையின் ஊண் நசையும் இன்று. மரன் முதலாயவற்றைக் குடை எனக்கொண்டு, வெய்யிலை மறைத்தலானும் வான்பெய்த நீரினை ஏலாமல் புறத்தே அருவியென விடுத்தலானும் வெப்பமும் தட்பமும் பொறுத்தல் இன்று.

நிலன் வெப்பமும் தட்பமும் பொறுக்கும். தானே பிறவற்றுக்கு இடமும் ஆசனமும் ஆதலன்றித் தனக்கோர் இடமும் ஆசனமும் இன்று.

பூ, நீரும் கோடும் கொடியும் முதலாய ஓரிடம் பற்றித் தாமரை இலை முதலாய ஓர் ஆசனத்து இருக்கும். தும்பியின் இசைகேட்டு முகம் மலர்ந்து நகை செயலானும், பின்னர் வாய்மூடாமையானும் இடையிட்டு மொழிதலும் வாய்வாளாமையும் இன்று.

துலாக்கோல், பொருளைத் தூக்கற்கு முன்னர்ப் பொருளும் நிறையும் விலையும் உசாவற்கு உரையாடலும் தூக்குங்காலை உரையாடாமையும் வாணிகம் துறப்பின் வாய்வாளாமையும் உடைத்து.

இனி அக்குடம், ஊணும் நீரும் ஏற்கும் இயல்புடைத்து ஆதலின் அவற்றின் நசையுடைத்து. வெயிலும் மழையும் தாங்கலின் அவற்றைப் பொறுத்தலுடைத்து.


1தொல்காப்பியம் பொருளதிகாரம்- 74.